நாளை வானில் சூப்பர் மூன்.. இரவு 8.23 மணிக்கு உச்சம் தொடும் பீவர் நிலவு! இந்தியாவில் எப்படி பார்ப்பது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரவு நேரத்தில் வானத்தை அண்ணாந்து பார்த்தால் நிலவு அழகாகத் தெரியும். ஆனால் நாளை நவம்பர் 24 தோன்றப்போகும் நிலவு வழக்கமான நிலவு கிடையாது. பூமிக்கு நெருக்கமாக வருவதால், வழக்கத்தைவிட கொஞ்சம் பெரியதாகவும் அதிக வெளிச்சத்துடனும் காட்சியளிக்கப் போகிறது. இதைத்தான் "பீவர் சூப்பர் மூன்" என்று அழைக்கிறார்கள். நாளை அந்த ஸ்பெஷல் தருணம் வானில் நடக்க போகிறது..

நிலவு தினமும் பூமியை சுற்றி வருகிறது. அப்படி சுற்றி வரும்போது சில நாட்களில் பூமிக்கு அருகிலும், சில நாட்களில் சற்று தள்ளியும் இருக்கும். இந்த நிலையில், நிலவு பூமிக்கு மிகவும் அருகில் வரும் நேரத்தில் முழு நிலவாகவும் தெரிந்தால் அதை சூப்பர் மூன் என்று அழைக்கிறார்கள்.

Beaver Moon Supermoon 2026 Astronomy News

சூப்பர்மூன் - 14 சதவீதம் பெரியது

நாளை தோன்றப்போகும் முழு நிலவும் அப்படித்தான். இதனால் வழக்கமான முழு நிலவைவிட சற்று பெரியதாகவும் பிரகாசமாகவும் தெரியும். இந்த சூப்பர் மூன் வழக்கமான நிலவைவிட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிகப் பிரகாசத்துடனும் இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த ஒப்பீடு ஆண்டின் மிகச்சிறிய முழு நிலவுடன் கணக்கிடப்படுவது. அதனால் நம் கண்களுக்கு நிலவு திடீரென மிகப் பிரம்மாண்டமாகத் தெரியும் என்று நினைக்க வேண்டாம். வழக்கமான நிலவுடன் ஒப்பிடும்போது வித்தியாசம் ஓரளவுக்குத்தான் தெரியும்.

பீவர் மூன் ஏன்?

நவம்பர் மாதத்தில் தோன்றும் முழு நிலவுக்கு பீவர் மூன் என்று பெயர். பீவர் என்பது நீர்நாய் வகையை சேர்ந்த ஒரு விலங்கின் பெயராகும்.. குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பு இந்த விலங்குகள் தங்களுக்கான இருப்பிடங்களைத் தயார்படுத்தும் காலம் இது. இதை அடிப்படையாக வைத்துதான் நவம்பர் மாத முழு நிலவுக்கு பீவர் மூன் என்று பெயர் வந்ததாம்.

எப்போது பார்க்கலாம்?

இந்திய நேரப்படி நவம்பர் 24-ம் தேதி இரவு 8.23 மணிக்கு முழு நிலவு உச்சநிலையை அடையும். ஆனால் அதுவரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நாளை மாலை சூரியன் மறையும்போதே கிழக்கு திசையில் நிலவு உதயமாகும். அந்த நேரத்தில் நிலவைப் பார்ப்பது மிகவும் அழகாக இருக்கும். வானம் மேகமூட்டம் இல்லாமல் இருந்தால் வெறும் கண்ணாலேயே இந்த நிலவைப் பார்க்கலாம். இதற்காக தொலைநோக்கியோ, வேறு எந்த கருவியோ தேவையில்லை.

சிகப்பு கலரில் நிலா

சில நேரங்களில் நிலவு வெள்ளை நிறத்திலும், சில நேரங்களில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்திலும் தெரிவதைப் பார்த்திருப்போம். குறிப்பாக நிலவு உதயமாகும்போது அது ஆரஞ்சு நிறத்தில் தெரிவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

அப்போது நிலவின் ஒளி பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தின் வழியாக நீண்ட தூரம் பயணிக்கிறது. இதனால் அதன் நிறம் மாறி நம் கண்களுக்குத் தெரிகிறது. அதனால் நாளை மாலை நிலவு உதயமாகும்போது அதன் நிறத்தையும் அழகையும் ரசிக்கலாம்.

கடல் அலையில் மாற்றமா?

நிலவுக்கு பூமியின் கடல் நீரை ஈர்க்கும் சக்தி இருக்கிறது. அதனால்தான் கடலில் அலைகள் உருவாகின்றன. சூப்பர் மூன் தோன்றும் காலத்தில் நிலவு பூமிக்கு அருகில் இருப்பதால், கடலில் வழக்கத்தைவிட சற்று உயரமான அலைகள் ஏற்படலாம். இதற்காக மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. இது இயற்கையாக நடைபெறும் நிகழ்வுதான்.

இந்த நவம்பர் மாத சூப்பர் மூனுடன் இந்த வானியல் நிகழ்வு முடிந்துவிடப் போவதில்லை. அடுத்தடுத்த மாதங்களிலும் முழு நிலவுகள் தோன்றவுள்ளன. டிசம்பர் 24-ம் தேதி கோல்ட் மூன், 2027 ஜனவரி 22-ம் தேதி வுல்ஃப் மூன், பிப்ரவரி 20-ம் தேதி ஸ்னோ மூன் ஆகிய முழு நிலவுகளும் வரவுள்ளன.

இவற்றில் டிசம்பர் 24-ம் தேதி தோன்றும் கோல்ட் மூன், 2026-ம் ஆண்டின் மிக அருகில் வரும் முழு நிலவாக இருக்கும். இப்படி அடுத்தடுத்து வானில் தோன்றப்போகும் நிலவுகளை ரசிக்க, தொலைநோக்கியோ பெரிய ஏற்பாடுகளோ தேவையில்லை. வானம் தெளிவாக இருந்தால் போதும். மாலை நேரத்தில் கொஞ்சம் வானத்தை அண்ணாந்து பார்த்தாலே இந்த அழகான காட்சியை ரசிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+