திரிஷாவுக்கு திடீர் பட்டம்.. உள்ளே நடந்தது என்ன? விஜய்யுடன் கைகோர்க்கிறாரா? பரபரப்பு பேச்சு
நெல்லை: நடிகை திரிஷா அரசியலுக்கு வருவாரா? தேர்தலில் போட்டியிடுவாரா? என்ற கேள்விகள் சமீபகாலமாகவே எழுந்து வருகின்றன. குறிப்பாக, தவெக தலைவர் விஜய் அரசியலில் களமிறங்கிய பிறகு திரிஷாவின் அரசியல் வருகை குறித்த பேச்சுகளும் அதிகரிக்கவே செய்தன.. இந்தச் சூழலில், திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு திரிஷாவின் பெயரில் புதிய பேரவை தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பேரவையின் தலைவரும் திரிஷா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு "இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை" என்ற புதிய நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான லோகோ வெளியீட்டு விழா நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அமைப்பின் நிறுவனரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ராஜகோபால், லோகோவை வெளியிட்டு நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.

இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை
திரிஷாவின் ரசிகராக இருந்து வந்த ராஜகோபால், நெல்லையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சாமி படத்தில் திரிஷா நடித்த கேரக்டரால் ஈர்க்கப்பட்டு இந்த அமைப்பை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தப் பேரவை வெறும் ரசிகர் மன்றமாக இல்லாமல், பொதுமக்களுக்கான நலப் பணிகளில் ஈடுபடும் அமைப்பாக செயல்படும் என்றும் அறிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் இதுகுறித்து ராஜகோபால் பேசியதாவது: "தமிழ்நாட்டின் முக்கியமான ஆளுமையாக மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா இருந்தார். ஜெயலலிதாவிடம் இருந்த அதே ஆளுமைத் திறனுடன் திரிஷா உள்ளார் என்பது அவருடன் பழகியவர்களுக்குத் தெரியும். அதனால் அவர் அரசியலில் பயணித்தால், தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்களைச் செயல்படுத்த முடியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழித்தோன்றலாகவே நாங்கள் அவரைப் பார்க்கிறோம். அதன் காரணமாகவே, இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை உருவாக்கியிருக்கிறோம்.
நலத்திட்டங்கள், சட்ட குழு
பல்வேறு அமைப்புகள் மருத்துவ முகாம், சட்ட உதவி முகாம், மரம் நடுதல் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்றவற்றை செய்து வந்தாலும் தங்களது அமைப்பு நேரடியாக களமிறங்கி மக்களுக்கு உதவிகளை மேற்கொள்ளும்.
சாதாரண மக்களுக்கு சட்ட உதவிகள் கிடைக்கும் வகையில் சட்ட குழுவை அமைத்துள்ளோம். ஏழை எளிய மக்களின் நோயை தீர்க்கும் வகையில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு நோயாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று மருத்துவ உதவி அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.
அரசு அலுவலகங்களில் மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் கிடைக்க உதவிகள் செய்வோம். சமூகப் பணிகளுக்காகவே தொடங்கப்பட்டுள்ள திரிஷா பேரவை சார்பாக தனியாக வலைத்தளம் தொடங்கப்படும். பொதுமக்கள் தங்களின் குறைகளை அந்த வலைத்தளத்தில் தெரியப்படுத்தினால் உரிய உதவிகள் செய்து கொடுக்கப்படும். ஏழை எளிய மக்களின் பிரச்னைகளை தீர்ப்பது திரிஷா பேரவையின் தலையாய கடமை.
இது அரசியல் சார்பு இயக்கம் கிடையாது மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்வதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்.. வருங்காலங்களில் தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்டவைகளை எங்களது அமைப்பின் தலைவி தான் முடிவு செய்ய வேண்டும்.
எங்களது எதிர்பார்ப்பு தேர்தலில் நின்று போட்டியிட்டால் மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்ய முடியும்.. தவெக தலைவர் விஜய்யுடன் இணைந்து அரசியலில் செயல்பட்டால் மக்களுக்கான திட்டங்களை செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.. அதனையே நாங்கள் வலியுறுத்தி உள்ளோம்
திரிஷா முடிவு என்ன?
தொழிலதிபரான ராஜகோபால் ஏற்கெனவே மதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இப்போது வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிலும் தொடர்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், திரிஷாவின் பெயரில் பேரவை தொடங்கப்பட்டிருப்பதும், அவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அதன் நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்திருப்பதும் புதிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இந்தப் பேரவை தொடங்கப்பட்டதற்கும் நடிகை திரிஷாவுக்கும் அதிகாரப்பூர்வமான தொடர்பு இருப்பதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. திரிஷாவும் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தேர்தலில் போட்டியா?
திரிஷா அரசியலுக்கு வருவார், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்ற பேச்சுகள் ஏற்கனவே பலமுறை எழுந்துள்ளன. குறிப்பாக, விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு திரிஷாவின் பெயரும் அரசியல் விவாதங்களில் இடம்பெற்றது. அவ்வளவு ஏன், விஜய்யின் திருச்சி கிழக்கு தொகுதியில் திரிஷா போட்டியிடலாம், அவருக்கு அரசியல் பொறுப்பு வழங்கப்படலாம் என்றெல்லாம் செய்திகள் பரவின. ஆனால் அவையெல்லாம் வெறும் யூகங்களாகவும், வதந்திகளாகவும், அனுமானங்களாகவும் கலைந்து விட்டன.
அதுமட்டுமல்ல, கடந்த மே மாதம் வெளியான ஒரு பேட்டியில், அரசியலுக்கு வருவது குறித்து திரிஷா தெளிவாக மறுப்பு தெரிவித்திருந்தார். தனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது என்றும், அரசியலுக்கு வர விருப்பமில்லை என்றும் அவர் வெளிப்படையாகவே கூறியிருந்தார். .
அப்படியிருக்கும்போது இப்போது அவரது பெயரிலேயே புதிய பேரவை தொடங்கப்பட்டுள்ளதால், மீண்டும் அதே கேள்வி எழுந்துள்ளது. திரிஷா உண்மையிலேயே அரசியலுக்கு வரப்போகிறாரா? தேர்தலில் போட்டியிடப் போகிறாரா? விஜய்யுடன் இணைந்து செயல்படப் போகிறாரா?
திரிஷா போட்டியிடுவாரா?
பேரவையின் தலைவர் தேர்தலில் திரிஷா போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார். ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் பேரவை சார்பில் யாராவது போட்டியிடுவார்களா? திரிஷா நேரடியாக அரசியலில் இறங்குவாரா? அல்லது மக்கள் நலப் பணிகளுடன் மட்டும் இந்த அமைப்பு செயல்படுமா? என்பதெல்லாம் இன்னும் தெளிவாகவில்லை.
ஏற்கனவே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவுக்கும் "இளைய புரட்சித்தலைவி" என்ற பட்டம் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது திரிஷாவுக்கும் அதே பட்டம் வழங்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
ரசிகர்களின் விருப்பம் ஒருபுறம் இருந்தாலும், திரிஷாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால்தான் அவரது அரசியல் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாகும். அதுவரை இந்தப் பேரவையின் செயல்பாடுகளையும், திரிஷாவின் அடுத்தகட்ட அறிவிப்பையும் கவனிக்க வேண்டியிருக்கிறது...!!!




Click it and Unblock the Notifications
