விஜய்க்கு பெரிய தலைவலி.. ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வராதா? போர்க் கொடி தூக்கும் ரேசன் ஊழியர்கள்!
சென்னை: தமிழகத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் "தாயுமானவர்" திட்டம் சிக்கலில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர் பணிச்சுமை மற்றும் அதிகாரிகளின் நெருக்கடிகளை கண்டித்து, அடுத்த மாதம் முதல் இந்த திட்டப் பணிகளை புறக்கணிக்க ரேஷன் கடை பணியாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வீடு தேடி சென்று வழங்கும் சேவையில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 2.28 கோடி குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் மாதந்தோறும் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, முதியோர், மாற்றுத்திறனாளிகள், படுக்கையிலிருந்து எழுந்து வர முடியாத நோயாளிகள் உள்ளிட்டோருக்கு உதவும் வகையில், அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் "தாயுமானவர்" திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
தாயுமானவர் திட்டம்
இந்த திட்டம் பலரின் பாராட்டைப் பெற்றிருந்தாலும், அதை செயல்படுத்தும் பணியாளர்கள் தரப்பில் அதிருப்தி அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ஏற்கனவே ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிக பணிச்சுமை இருப்பதாக தெரிவித்துள்ளனர். தினசரி விநியோகம், இருப்பு பராமரிப்பு, கணினி பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இடையே கூடுதலாக வீடு தேடி சென்று பொருட்கள் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ரேஷன் கடை ஊழியர்கள்
மேலும், பொதுவிநியோக திட்டத்தின் இணைய செயலியில் பிரதிநிதி கோரிக்கை என்ற வசதி ஏற்கனவே இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதன் மூலம் நேரடியாக கடைக்கு வர முடியாத முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் உள்ளிட்டோர் தங்களுக்கு நம்பகமான ஒருவரை பிரதிநிதியாக நியமித்து பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர்கள் கூறுகின்றனர்.
முதியோர் ரேஷன் சேவை
இந்த வசதி இருக்கும்போது, கூடுதல் மனிதவளமோ அல்லது வசதிகளோ இல்லாமல் ரேஷன் கடை ஊழியர்களை வீடு வீடாக அனுப்புவது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அதோடு, பல இடங்களில் அதிகாரிகள் பணியாளர்களை மிரட்டும் வகையில் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பணியை சரியாக செய்யவில்லை என்ற பெயரில் நடவடிக்கை எடுப்பேன், பணிநீக்கம் செய்வேன் போன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்படுவதாகவும், இது பணியாளர்களிடையே கடும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
கைரேகை பதிவு
இதனால், தாயுமானவர் திட்டத்தை தொடர வேண்டுமெனில் சில முக்கிய கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, இந்த திட்டத்திற்காக தனி ஊழியர்களை நியமிக்க வேண்டும், கூடுதல் கைரேகை பதிவு கருவிகள் வழங்க வேண்டும், பெண் பணியாளர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த ஊழியர்களுக்கு இந்த பணிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு கேமராக்கள்
மேலும், நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்படும் நடைமுறையை முழுமையாக கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட பாக்கெட் முறையிலான விநியோகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் அவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.
ஊழியர்கள் எச்சரிக்கை
மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வேலை நேரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தற்போது மாவட்டத்திற்கு மாவட்டம் நடைமுறையில் இருக்கும் வேலை நேர வேறுபாடுகள் பணியாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த கோரிக்கைகள் அனைத்தையும் அரசு இம்மாத இறுதிக்குள் பரிசீலித்து தீர்வு காண வேண்டும். இல்லையெனில் ஜூலை மாதம் முதல் தாயுமானவர் திட்ட பணிகளை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ரேஷன் கடை பணியாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசுக்கு கோரிக்கை
இந்த போராட்டம் நடைமுறைக்கு வந்தால், வீட்டை விட்டு வெளியே வர முடியாத முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் பொருட்களை பெறுவதில் சிரமம் ஏற்படலாம். எனவே, பணியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் பொதுமக்களின் நலன் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு அரசு விரைவாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications