உதயநிதிக்கு இன்றே ஜாமீன் என்றால் பிறகு எதற்கு இந்த அவசரக் கைது? யார் போட்ட பிரஷர்? இடிக்குதே!
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சுத் தொடர்பாக, இன்று காலை 11 மணியளவில் சென்னை நீலாங்கரையில் வச்சு கைது செய்யப்பட்டார். ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அவசர விசாரணையின் போது, உதயநிதி ஸ்டாலினை சிறையில் அடைக்கும் எண்ணம் எதுவும் இல்லை.. விசாரணைக்குப் பிறகு காவல் நிலைய ஜாமீனிலேயே விடுவித்து விடுவோம்.. எனத் தமிழ்நாடு அரசுத் தரப்பு தெரிவித்துள்ள தகவல், புதிய கேள்விகளையும் சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது.

ஜாமீனில் விடுவிக்கப்படும் வழக்கில் எதற்கு இவ்வளவு அவசரம்?
உதயநிதி ஸ்டாலின் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிணையில் வர இயலாத சட்டப் பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட சூழலில், இன்றே காவல் நிலைய ஜாமீனில் விடுவித்து விடுகிறோம் என்று உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது.
அப்படியென்றால், அவரை நள்ளிரவில் வழக்குப் பதிவு செய்து, விடியற்காலையில் வீட்டை முற்றுகையிட்டு, சென்னையிலிருந்து தஞ்சாவூர் வரை 300 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் காவல் வாகனத்தில் அவசர அவசரமாக அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்ற கேள்வி நடுநிலையாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
யார் மனதைக் குளிர்விக்க இந்த நாடகம்?
தஞ்சாவூர் மேடையில் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் தவறானவை என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. அரசியல் நாகரிகத்தின் எல்லையைத் தாண்டிப் பேசுவது கண்டிக்கத்தக்கது என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.
ஆனால், ஒரு தவறுக்குச் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது வேறு; அதையே ஒரு பெரிய அரசியல் நாடகமாக மாற்றுவது வேறு. எதை நிரூபிப்பதற்காக அல்லது யார் மனதைக் குளிர்விப்பதற்காகத் தமிழ்நாடு காவல்துறை இவ்வளவு பெரிய அதிரடி நடவடிக்கையை அரங்கேற்றியது?
காலையிலிருந்து நிலவிய பதற்றம் - யார் பொறுப்பு?
செவ்வாய்க்கிழமை காலை முதலே சென்னை நீலாங்கரை பகுதி போர்க்களம் போலக் காட்சியளித்தது.
பொதுமக்கள் அவதி
முக்கியச் சாலைகளில் அமைக்கப்பட்ட போலிஸ் தடுப்புகள், போக்குவரத்து மாற்றங்கள் காரணமாக அன்றாடப் பணிக்குச் சென்ற பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
மாநிலம் தழுவிய பதற்றம்:
திருச்சி, மதுரை, தஞ்சை, கோவை எனப் பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பல இடங்களில் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுத் தேவையில்லாத சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை உருவானது.
அரசு இயந்திரத்தின் விரயம்:
நூற்றுக்கணக்கான காவல் துறையினர், உயர் அதிகாரிகள், தனிப்படை வாகனங்கள் என முழு அரசு எந்திரமும் ஒரே ஒரு அரசியல் தலைவரின் பயணத்திற்காக நாள் முழுவதும் முடக்கி வைக்கப்பட்டது.
இதற்கெல்லாம் யார் பொறுப்பு ஏற்கப் போகிறார்கள்?
சென்னையிலிருந்து தஞ்சாவூர் வரை அழைத்துச் சென்றதால் என்ன பலன்?
முடிவில், காவல் நிலையத்திலேயே ஜாமீன் வழங்கி மாலைக்குள் விடுவிக்கப் போகிறார்கள் என்றால், உதயநிதி ஸ்டாலினைச் சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றதால் அரசுக்கோ அல்லது காவல்துறைக்கோ என்ன பெரிய சாதனை அல்லது பலன் கிடைத்துவிட்டது?
இந்த அவசரக் கைது நடவடிக்கை, தவறு செய்தவருக்குத் தண்டனை பெற்றுத் தருவதைக் காட்டிலும், எதிர்க்கட்சித் தலைவருக்குத் கூடுதல் அரசியல் அனுதாபத்தை மட்டுமே தேடிக் கொடுத்துள்ளது. சட்டம் அதன் கடமையைச் செய்ய வேண்டும்.. ஆனால் அது அரசியல் கைபாவையாக மாறி மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கக் கூடாது என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications
