லதா மங்கேஷ்கர் புகழ், ஏழிசையாய், இசைப்பயனாய், என்றென்றும் நிலைத்து இருக்கும்: வைகோ புகழஞ்சலி
சென்னை: இசைக்குயில் லதா மங்கேஷ்கர் புகழ், ஏழிசையாய், இசைப்பயனாய், என்றென்றும் நிலைத்து இருக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
Recommended Video
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் லதா மங்கேஷ்கர். இன்று சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கர் காலமானார்.
லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு தேசிய அளவில் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்; தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. லதா மங்கேஷ்கர் மறைவுக்கு நாடு முழுவதும் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

வைகோ புகழாரம்
மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ வெளியிட்டுள்ள இரங்கல்: இசை என்றாலே புகழ். அந்த இசைத்துறையில் புகழ்க்கொடி நாட்டி, இன்று நம்மை எல்லாம் கண்ணீரில் ஆழ்த்தி விடைபெற்றுள்ளார் இசைக்குயில் லதா மங்கேஷ்கர். அவருடைய பாடல்கள், அவரது குரலில் கேட்கும்போது, அது நம்மை எங்கோ இழுத்துச் செல்லும். கோவா மாநிலத்தில் மங்கேஷ்கர் கிராமத்தில் பிறந்த லதா, 1942 ஆம் ஆண்டு, 13 ஆவது வயதில் பாடத் தொடங்கினார். இசைதான் அவரது மூச்சு. ஏறத்தாழ 80 ஆண்டுகளாகப் பாடினார் பாடினார் பாடிக்கொண்டே இருந்தார்.

தமிழ் உள்ளிட்ட மொழிகளில்..
இசைக்கு எல்லைகள் இல்லை, எந்தத் தடையும் இல்லை. எனவே, இந்தியாவின் அத்தனை மொழித் திரைப்படங்களிலும் அவர் பாடினார். அந்தக் காலத்தில், வானொலிகளில் தமிழ்நாடு முழுமையும் அவரது பாடல்கள் ஒலித்தன. நான் ஒரு இசை ரசிகன். எத்தனையோ சோதனைகளுக்கு இடையில் எனக்கு ஆறுதலாக இருப்பது இசைதான். மாணவப் பருவத்தில் சென்னையில் எத்தனையோ ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்த்து இருக்கின்றேன். இந்திப் படங்களையும் பார்த்து இருக்கின்றேன். எனக்கு அந்த மொழி புரியாவிட்டாலும், லதா மங்கேஷ்கரின் பாடல்களும், அவரது இனிய குரலும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். உயிரோட்டமான குரல் அது. உணர்ச்சிகளின் கலவையாக ஒலித்தது. அவர் தமிழிலும் பாடினார். வானரதம் திரைப்படத்தில், எந்தன் கண்ணாளன் கடல் நோக்கிப் போகின்றான் என்று அவர் பாடிய பாடலை இன்றைக்கும் யூடியூப் காணொளியில் பார்க்க முடிகின்றது. அவர் பெற்ற விருதுகளைக் கணக்கிட முடியாது. இந்தியாவின் மிக உயரிய பாரத் ரத்னா விருதையும் பெற்றவர். ஆனால், அந்த விருதுகளை விட, தன் குரலால் ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்கு அவரது குரல் அளித்து வந்த ஆறுதல்தான் மிகப் பெரியது. அளவிட முடியாதது. அவரது குடும்பமே இசைக்குடும்பம்தான். அவரது தங்கை ஆஷாவும் புகழ் பெற்ற பாடகியாகத் திகழ்கின்றார்.

நிலைத்து நிற்கும்
கானக்குயில் லதா மங்கேஷ்கர் அவர்கள் இன்று நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது இனிய குரல் அடங்கி விடாது. காற்றில், விண்வெளியில் கலந்து இருக்கின்ற அந்தக் குரல் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், அடுத்தடுத்த தலைமுறைகளையும் கவரும்...அவர்களது நெஞ்சங்களில் ஊடுருவிப் பாயும் என்பது திண்ணம். திசை தெரியாத வாழ்க்கையில், இசைக்குயிலாக இடம் பிடித்து இருப்பவர் லதா மங்கேஷ்கர் ஆவார். இசைக்குயில் லதா மங்கேஷ்கர் புகழ், ஏழிசையாய், இசைப்பயனாய், என்றென்றும் நிலைத்து இருக்கும்.

கே.எஸ். அழகிரி இரங்கல்
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தமது இரங்கல் செய்தியில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி தமது 92 வது வயதில் இந்தியாவின் இசைக்குயில் திருமதி லதா மங்கேஷ்கர் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். ஏறத்தாழ 30 ஆயிரம் பாடல்களை 20 இந்திய மொழிகளில் பாடி கின்னஸ் சாதனை படைத்தவர். மதம், மொழி, இனம், ஜாதி எல்லைகளைக் கடந்து திருமதி லதா மங்கேஷ்கர் பாடலை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. மெல்லிசை அரசி என அழைக்கப்பட்ட திருமதி லதா மங்கேஷ்கர் பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று சாதனை படைத்தவர். இந்தி படங்களில் லதா மங்கேஷ்கர், முகமது ரபி ஆகியோர் இணைந்து பாடிய பாடல்களினால் பல திரைப்படங்கள் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளன. இந்தியாவின் பெருமையை தமது குரல் வளத்தால் உலக அரங்கில் உயர்த்திய திருமதி லதா மங்கேஷ்கர் அவர்களது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இவரது மறைவால் இந்திய மக்கள் அனைவரும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். திருமதி லதா மங்கேஷ்கர் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், எண்ணில் அடங்கா ரசிகர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பிரபல பின்னணி பாடகர் பாரத ரத்னா திருமதி.லதா மங்கேஷ்கர் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். அவர் பாடிய காலத்தால் அழியாத பாடல்களின் வழியே என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். லதா மங்கேஷ்கர் மறைவால் வாடும் உறவினர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications