சொத்து வச்சிருக்கீங்களா? இனிமே நிலத்தை இப்படித்தான் கணக்கிடணும்! தமிழக அரசின் அந்த 1 குபீர் மாற்றம்
சென்னை: குடியிருப்பு வகைப்பாட்டில் உள்ள பகுதிகளில் கடைகள், தொழிற்சாலைகளுக்கான விற்பனையை பதிவு செய்யும்போது வீடுகளுக்கான வழிகாட்டி மதிப்புகளையே கடைப்பிடிக்கலாம் என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.. புதிய மதிப்பு நிர்ணயிக்க தேவையில்லை என்றும், அந்தச் சொத்து அமைந்துள்ள தெருவுக்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்புகளையே அப்படியே பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. விவசாய நிலங்களில் அமையும் கடைகளுக்கும் தெரு மதிப்பை சதுரடி அடிப்படையில் கணக்கிட்டுப் பதிவு செய்யப் பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் குடியிருப்பு வகைப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான விற்பனையைப் பதிவு செய்யும்போது, அந்தப் பகுதிக்கான வீடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகளையே இனி கடைப்பிடிக்கலாம் எனப் பதிவுத்துறை அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாகப் பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனைத்து மண்டலப் பதிவு அதிகாரிகளுக்கும் விரிவான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்..
தமிழக பதிவுத்துறை
தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் நிலங்களுக்கு, அவை அமைந்துள்ள தெரு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு வாரியாக வழிகாட்டி மதிப்புகள் பதிவுத்துறையால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன.. இந்த மதிப்புகள் அனைத்தும் பதிவுத்துறையின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளன.
எந்தவொரு சொத்து விற்பனை பத்திரத்தையும் பதிவு செய்யும்போது, இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த வழிகாட்டி மதிப்புகளின் அடிப்படையிலேயே முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றன..
வழிகாட்டி மதிப்பு - சொத்து வகை
இப்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டி மதிப்புகளில் குடியிருப்பு, வணிகம், தொழிற்சாலை மற்றும் விவசாயம் எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் தனித்தனியாக மதிப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.. ஒவ்வொரு சொத்தைப் பதிவு செய்யும்போதும், அந்த சொத்து எந்த வகைப்பாட்டில் உள்ளதோ அந்தப் பிரிவின் கீழ் வரும் வழிகாட்டி மதிப்பைத் தான் அதிகாரிகள் இதுவரை கணக்கில் எடுத்து வந்தனர்.
இருந்தாலும் நடைமுறையில் சில சிக்கல்கள் நீடித்து வந்தன.. குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட பகுதி குடியிருப்புப் பகுதியாக அங்கீகரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், அதே பகுதியில் உள்ள ஒரு மனையில் ஒரு கடையோ அல்லது ஒரு தொழிற்சாலையோ அமைந்திருக்கக்கூடும்.
சொத்து விற்பனை பத்திரங்கள்
இத்தகைய சொத்துக்களை விற்பனை செய்யும்போது, அதற்கு வீடுகளுக்கான வழிகாட்டி மதிப்பை அடிப்படையாகக் கொள்வதா அல்லது அது வணிக ரீதியில் பயன்படுத்தப்படுவதால் தொழிற்சாலைக்கான தனி மதிப்பை நிர்ணயம் செய்வதா என்பதில் அதிகாரிகளிடையே குழப்பம் நிலவி வந்தது..
இந்த குழப்பங்களுக்குத் தீர்வு காணும் வகையில்தான், இப்போது புதிய உத்தரவு ஒன்று அதிரடியாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இந்த உத்தரவின்படி, "சொத்து விற்பனைப் பத்திரங்களை பதிவு செய்யும்போது அந்தந்தப் பகுதிக்கு மாநில அளவிலான மையக்குழு அங்கீகரித்த மதிப்புகளை மட்டுமே அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டும்..
ஏக்கர் கணக்கில் விவசாய நிலம்
ஒருவேளை குடியிருப்பு வகைப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில் கடை அல்லது தொழிற்சாலை விற்பனை செய்யப்பட்டால், அதற்குப் புதிய மதிப்பைக் கோரத் தேவையில்லை.. அந்தச் சொத்து அமைந்துள்ள தெருவுக்கு ஏற்கனவே என்ன குடியிருப்பு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ, அதையே அப்படியே கடைப்பிடித்துப் பத்திரப் பதிவுகளை மேற்கொள்ளலாம். இதற்காக தனியாகவோ அல்லது கூடுதலாகவோ மதிப்பு நிர்ணயிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதேபோல், விவசாய வகைப்பாட்டில் உள்ள நிலங்களில் கட்டப்பட்டுள்ள கடைகள் அல்லது தொழிற்சாலைகளை விற்பனை செய்யும்போதும் இதே நடைமுறை பின்பற்றப்படும்.. அதாவது, அந்த நிலம் அமைந்துள்ள தெருவுக்கான மதிப்பை அப்படியே ஆதாரமாகக் கொள்ளலாம். ஆனால், விவசாய நிலத்தைப் போல் ஏக்கர் கணக்கில் மதிப்பிடாமல், வணிக நோக்கம் கருதி அந்த மதிப்புகளைச் சதுரடி அடிப்படையில் மட்டுமே கணக்கிட வேண்டும்" எனவும் பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு
பதிவுத்துறையின் இந்த உத்தரவு தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.. குடியிருப்பு பகுதிகளில் அமைந்துள்ள வணிகச் சொத்துக்களின் வழிகாட்டி மதிப்பு தொடர்பாக நிலவி வந்த நீண்ட காலப் பிரச்சனைக்கு இந்த உத்தரவு ஒரு முக்கிய தீர்வாக அமைந்துள்ளது.
இனி வரும் காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள இத்தகைய சொத்துக்களின் விற்பனைப் பதிவுகள் எந்தவிதமான கூடுதல் மதிப்பீடும் இன்றி தங்குதடையின்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த நடைமுறை மாற்றத்தை அனைத்துப் பதிவு அதிகாரிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..












Click it and Unblock the Notifications