மாஸ்.. ஐஏஎஸ்களை உருவாக்கும் தமிழ்நாடு அரசு! நான் முதல்வன் மதிப்பீட்டு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
சென்னை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் நடத்தும் நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவில் தமிழ் நாடு அரசின் UPSC முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்துக்காக நான் முதல்வன் மதிப்பீட்டுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும், சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது.

அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் 2023-24 க்கான தமிழ் நாடு அரசின் பட்ஜெட் உரையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசுக் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் 1000 மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் 7,500 ரூபாய், பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஊக்கத் தொகைக்கான 1000 பயனாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 02.08.2023 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு 17.08.2023 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நான் முதல்வன். மற்றும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான மதிப்பீட்டுத் தேர்வு 10.09.2023 அன்று நடைபெறும் நிலையில், இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டு 30.08.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
நான் முதல்வன் ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் "நான் முதல்வன்" திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக தொழில் துறையின் தேவை சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை இத்திட்டத்தின் மூலம் 13 லட்சம் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
கல்லூரி பாடத்திட்டத்துடன் சேர்த்து மாறி வரும் தொழில் நுட்ப உலகிற்கேற்ற திறன் படிப்புகள் துறை சார்ந்த வல்லுநர்கள் உதவியுடன் பிரத்யேக திறன் சார் பாடங்களை வடிவமைத்து, கல்லூரி பாடத் திட்டத்துடன் சேர்த்து மாணவர்கள் படிக்கும் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் வரையிலான ஊதியத்தில் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி வளாகங்களிலேயே வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
2022-23 கல்வியாண்டில் "நான் முதல்வன்" திட்டத்தின் மூலமாக பொறியியல் கல்லூரிகளில் 59,132 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 2,48,734 இறுதியாண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு முன்னணி நிறுவனங்களின் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு 62,634 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications