மத்திய பட்ஜெட் எப்படி? யானைப் பசிக்கு சோளப்பொரி போடுவது போல்! விளாசும் தமிழக காங்கிரஸ்!
சென்னை: மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரை யானைப் பசிக்கு சோளப்பொரி போடுவது போல் உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
தற்போது நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் நிதிநிலை அறிக்கையில் இல்லை என அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

விலைவாசி உயர்வு
2014 ஆம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைகிற போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றுகிற வகையில் 2022-23 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படவில்லை. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு, நடுத்தர மக்களுக்கு எந்த சலுகையும் இல்லாத நிலை இவற்றிற்கெல்லாம் எவ்வித தீர்வும் இல்லாத நிதிநிலை அறிக்கையாக இது அமைந்திருக்கிறது. எந்த நோக்கமும் இல்லாமல் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. .

வருமான வரி வரம்பு
வருமான வரி கட்டுபவர்களுக்கும், பெட்ரோலியப் பொருட்களுக்கான வரி விதிப்பிலும் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. உணவு, உர மானியங்கள் கடுமையாக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்திய உணவு கழகத்திற்கு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட மானியத்தில் ரூபாய் 64 ஆயிரத்து 910 கோடி குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, யூரியா மானியத்தில் ரூபாய் 65 ஆயிரத்து 9 கோடி, அதாவது 30.8 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

யானைப் பசி
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதி கொடுத்து அது நிறைவேற்றப்படாத நிலையில் அதை பெருக்குவதற்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ரயில்வே துறை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வேலை வாய்ப்புகள் குறைக்கப்பட்டு வருகிறது. 60 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டிய நிலையில் 40 கோடி பேருக்குத் தான் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், நிதியமைச்சர் அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறுகிறார். இது யானைப் பசிக்கு சோளப்பொரி போடுவது போல் உள்ளது.

தயாராக இல்லை
இந்தியப் பொருளாதாரம் தொற்று நோய் பரவலின் போது எத்தகைய நிலையில் இருந்ததோ, அதிலிருந்து மீண்டதாக தெரியவில்லை. 2019-20 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூபாய் 145 லட்சம் கோடியாக இருந்தது, ரூபாய் 147 லட்சம் கோடியாக அந்தாண்டு இறுதியில் உயருகிற நிலையில் தான் பொருளாதாரம் இருந்தது. இதனால் இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்கிற மாயத் தோற்றத்தை மக்கள் நம்புவதாக இல்லை.
Recommended Video

பாஜக ஆட்சி
இந்திய பொருளாதாரம் சமநிலைத் தன்மையை இழந்து, ஒருசில தொழிலதிபர்கள் சொத்து குவிப்பதற்கான வாய்ப்புகள் பா.ஜ.க. ஆட்சியில் அதிகரித்துள்ளது. அதை தடுத்து அனைவருக்குமான வளர்ச்சி என்பதைக் காண முடியாத ஒன்றாக இருக்கிறது. இது பா.ஜ.க. ஆட்சி யாருக்காக நடக்கிறது என்பதை என்பதை தெளிவுபடுத்துகிறது.












Click it and Unblock the Notifications