காங்கிரஸ் தலைவர்களை சொந்தம் கொண்டாடுகிறது பாஜக! இது மலிவான அரசியல்! சாடும் காங்கிரஸ்!
சென்னை: பாஜகவினர் மலிவான அரசியல் செய்து மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.
இந்திய விடுதலைக்கு பாடுபட்ட காங்கிரஸ் தலைவர்களை சொந்தம் கொண்டாட பாஜகவினருக்கு தகுதியில்லை என சாடியிருக்கிறார்.
மேலும், சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது;

தகுதி இல்லை
''இந்திய விடுதலைக்கு பாடுபட்ட காங்கிரஸ் தலைவர்களை சொந்தம் கொண்டாடுவதற்கு பா.ஜ.க.வினருக்கு என்ன தகுதியிருக்கிறது ? சுதந்திரப் போராட்டத்தில் கடுகளவு பங்களிப்பு கூட செய்யாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை வழிவந்த ஜனசங்கம், பாரதிய ஜனதா கட்சியினர், தேசியத் தலைவர்கள் குறித்துப் பேசுவதற்குக் கூட அருகதையற்றவர்கள். ''

ஆட்சிப்பணி
''பா.ஜ.க. ஆட்சி அமைந்தபிறகு, மாநில உரிமைகளை படிப்படியாகப் பறிக்கிற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ஆட்சிப் பணியில் இருப்பவர்கள் எவரும் இனி சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பணியாற்றுகிறவர்களை எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசு அழைத்துக் கொள்கிற உரிமையைப் பெறுவதற்குத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இந்த திருத்தம் நிறைவேற்றப்பட்டால் இந்திய ஆட்சிப் பணியாளர்கள் அனைவரும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பார்களே தவிர, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கமாட்டார்கள். ''

ஒகேனக்கல்
''காவிரி ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டம் ரூபாய் 4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டதும், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் வெகுண்டெழுந்து இத்திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசுக்கு முழு உரிமை இருக்கிறது.''

மீனவர் பிரச்சனை
''இந்தியாவின் அண்டை நாடான இலங்கை அரசுக்கு மத்திய பா.ஜ.க. அரசு ஏற்கனவே ரூபாய் 10,500 கோடியும், மீண்டும் ரூபாய் 11 ஆயிரம் கோடியும் நிதியுதவி செய்ய முன்வந்திருக்கிறது. இந்தளவிற்கு அண்டை நாட்டின் நலனில் அக்கறையோடு நிதியுதவி செய்கிற பா.ஜ.க. அரசு, தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதை தடுக்கவோ, மீனவர்கள் தாக்கப்படுவதற்கு முடிவுகட்டவோ ஏன் முடியவில்லை ? இலங்கையை பொறுத்தவரை இந்தியாவின் அயல்நாட்டு கொள்கை கடுமையான தோல்வியை சந்தித்திருக்கிறது என்பதற்கு தமிழக மீனவர்கள் எதிர்கொள்கிற தாக்குதல்களே சரியான உதாரணமாகும்.''

பள்ளி மாணவி
''தஞ்சை பள்ளி மாணவி குறித்து விசாரிப்பதற்கு காவல்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தவறு செய்தவர்கள் என்று கருதப்பட்டால் உரிய தண்டனை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி கூறியிருக்கிறார். எனவே, விசாரணை முடிந்து உண்மை வெளிவருகிற வரை இதை அரசியலாக்கி மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற முயற்சியில் பா.ஜ.க.வினர் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.''

மலிவான அரசியல்
''கோவைக்கு அருகே பேரூராட்சி அலுவலகத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் அத்துமீறி நுழைந்து பிரதமர் மோடி படத்தை பலவந்தமாக சுவற்றில் மாட்டியுள்ளனர். இதையொட்டி சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இத்தகைய மலிவான நடவடிக்கைகளில் பா.ஜ.க. ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.''












Click it and Unblock the Notifications