மின்சார வாரியத்திற்கு ரூ.9,576 கோடி கூடுதல் செலவு.. CAG அறிக்கையில் வெளியான 7 முக்கிய அதிர்ச்சிகள்
சென்னை: தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதால், தமிழகத்திற்கு ரூ.9,576 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை துறை (CAG) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில், மின் உற்பத்தி, நிலக்கரி கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஏற்பட்ட கூடுதல் செலவுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் இதுதான்: "கடந்த 2023 மார்ச் வரை, தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி திறன் 35,036 மெகாவாட்டாக இருந்தது. ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சொந்த மின் உற்பத்தி திறன் 7,175 மெகாவாட் மட்டுமே இருந்தது.

இதனால், மின்சார தேவையை சமாளிக்க வெளியில் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக ஆண்டுதோறும் இழப்பு ஏற்பட்டது. 2023 மார்ச் நிலவரப்படி மொத்த இழப்பு ரூ.1.62 லட்சம் கோடியாக இருந்தது.
தமிழக மின்சார வாரியம்
அனல் மின் நிலையங்களில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், மின் உற்பத்தியில் தடைகள் ஏற்பட்டன. இதனால், மின் தேவையை பூர்த்தி செய்ய தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டது. இதன் காரணமாக மட்டும் ரூ.9,576 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டது.
வடசென்னை விரிவாக்க அனல் மின் நிலையத்தின் செயல்திறன் குறைவாக இருந்ததும், அங்கு மின் உற்பத்தியில் இருந்து கிடைக்கும் சாம்பலை கையாளும் அமைப்பு சரியாக செயல்படாததும் கூடுதல் செலவுக்கு காரணமாக அமைந்தது. இதனால், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ரூ.131.58 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டது.
நிலக்கரி பற்றாக்குறை
நிலக்கரி வழங்குவதில் ஏற்பட்ட பற்றாக்குறையை சமாளிக்க அதிக விலைக்கு நிலக்கரி வாங்கப்பட்டது. இதனால், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ரூ.3,941 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டது. மேலும், 2001 முதல் 2024 வரையிலான காலத்தில் ஏற்பட்ட நிலக்கரி பற்றாக்குறை முறையாக கணக்கிடப்படவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரிக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையான விலை முறையில் இருந்து, தொழில் துறையில் நடைமுறையில் உள்ள விலை மாறும் முறைக்கு மாறாமல் இருந்ததால் ரூ.1,244.10 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டது. மேலும், குறைந்த தரம் கொண்ட நிலக்கரியை பயன்படுத்தியதால், தேவையான மின் உற்பத்தியை பெற கூடுதலாக நிலக்கரி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் தவிர்த்திருக்கக்கூடிய ரூ.1,563 கோடி செலவு ஏற்பட்டது.
ராமநாதபுரம் உப்பூர் அனல் மின் திட்டம்
ராமநாதபுரம் உப்பூர் அனல் மின் திட்டத்தில் ரூ.2,020 கோடி மதிப்புள்ள பொருட்கள் வாங்கப்பட்ட நிலையில், அவை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக எந்த பயனும் இல்லாமல் பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளன.
எரிவாயு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களில், வழக்கத்தை விட அதிக அளவு எரிவாயு பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ரூ.296 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டதாக CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார துறை என்ன செய்ய வேண்டும்?
CAGயின் இந்த அறிக்கையின் அடிப்படையில் பார்த்தால், கூடுதல் செலவுகளைத் தவிர்க்க மின்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது போலும்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "அனல் மின் நிலையங்களில் பழுது ஏற்படுவதற்கு முன்பே முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, சொந்த மின் நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மின்சாரம் பற்றாக்குறை ஏற்படும் நேரங்களில் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கும் நிலையை குறைக்க வேண்டும்.
அதேபோல், நிலக்கரியை சரியான விலையில் வாங்குவதுடன், அதன் தரம் மற்றும் கிடைக்கும் அளவை முறையாக கண்காணிக்க வேண்டும். குறைந்த தர நிலக்கரியால் ஏற்படும் கூடுதல் செலவையும் தவிர்க்க வேண்டும்.
உப்பூர் அனல் மின் திட்டத்தில் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் ரூ.2,020 கோடி மதிப்புள்ள பொருட்களை என்ன செய்வது என்பது குறித்தும் உடனடியாக முடிவு செய்ய வேண்டும்... மொத்தமாக, ஒவ்வொரு மின் நிலையத்திலும் எவ்வளவு செலவு செய்து எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதையெல்லாம் தொடர்ந்து கண்காணித்து, தேவையற்ற செலவுகளை குறைப்பதே மின்துறையின் முக்கிய பணியாக இருக்க வேண்டும்" என்று கருத்து தெரிவித்துள்ளனர்


Click it and Unblock the Notifications
