கரண்ட் பில் திடீரென டபுள் மடங்கா? இனி உடனே கட்ட வேண்டாம்.. 3 நாளில் ஆய்வு! தமிழக மின்வாரியம் ஆக்ஷன்
சென்னை: மின்சார கட்டணம் வழக்கத்தைவிட திடீரென அதிகமாக வந்துவிட்டதா? இனி அப்படிப்பட்ட பில்லை உடனே செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதிக மின் பயன்பாடு அல்லது தவறான மீட்டர் ரீடிங் காரணமாக பில் உயர்ந்திருப்பதாக கஸ்டமர்கள் புகார் சொன்னால், அதை மறுபரிசீலனை செய்த பிறகே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே, வழக்கத்தைவிட அதிகமாக மின்சார பில் வருவதாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன. சிலருக்கு வழக்கமாக வரும் கரண்ட் பில்லைவிட டபுள் மடங்கு அல்லது 3 மடங்கு வரை பில் அதிகரித்ததாகவும் புகார்கள் எழுந்து பரபரப்பை தந்துவிட்டன..

தவறான பில்லிங் & ரீடிங்
இதையடுத்து அதிக தொகை கொண்ட பில்களை கண்காணித்து, தவறான பில்லிங் ஏற்படாமல் தடுக்க தமிழக மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறிப்பாக, கடந்த ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்திய வீட்டு இணைப்புகள் கண்காணிக்கப்படும். அந்த இணைப்புகளில் இப்போது உருவாகும் பில், முந்தைய பில் தொகையைவிட 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தால், அந்த பில் தானாகவே தற்காலிகமாக நிறுத்தப்படும். பிறகு மீட்டர் ரீடிங் மற்றும் மின் பயன்பாடு சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்படும்.
மீட்டர் ரீடிங் எடுக்கப்பட்ட நாளிலிருந்து 3 வேலை நாட்களுக்குள் அதிகாரிகள் நேரடியாக சென்று கள ஆய்வு செய்து விவரங்களை புதுப்பிக்க வேண்டும்.
ஒருவேளை ரீடிங் தவறாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலோ, அதற்கேற்ப பில் திருத்தம் செய்யப்படும். ரீடிங் சரியாக இருப்பது உறுதி செய்யப்பட்டாலோ, அதன் அடிப்படையிலேயே மின் கட்டணம் வசூலிக்கப்படும். மறுபரிசீலனைக்கு பிறகும் நுகர்வோர் பில்லை ஏற்கவில்லையானால், வழக்கமான நடைமுறையின்படி மீண்டும் ஆய்வு செய்யப்படும்.
பிரிக்கப்பட்ட அதிகாரிகளின் பதவி
கரண்ட் பில் அதிகமாக வருவதை,. சரிபார்க்கும் பொறுப்பும் அதிகாரிகளின் பதவிக்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளது. முந்தைய பில்லைவிட ரூ.1000 வரை அதிகமாக இருந்தால் ஏஐ நிலை அதிகாரியும், ரூ.1001 முதல் ரூ.2000 வரை இருந்தால் வருவாய் பிரிவு ஏஎஸ் நிலை அதிகாரியும் ஆய்வு செய்ய வேண்டும்.
ரூ.2001 முதல் ரூ.5,000 வரை அதிகரித்திருந்தால் ஏடிஓ நிலை அதிகாரியும், ரூ.5001 முதல் ரூ.10,000 வரை இருந்தால் வருவாய் பிரிவு ஏஏஓ அதிகாரிகளும் ஆய்வு செய்ய வேண்டும். ரூ.10,000-க்கு மேல் அதிகமாக பில் இருந்தால் உபகோட்ட ஏஇஇ அதிகாரி மறு ஆய்வு செய்ய வேண்டும்.
ஆனால் எதற்காக அதிக பில் வருகிறது?
மீட்டர் ரீடிங் எடுப்பதில் ஏற்பட்ட தாமதம் அல்லது முந்தைய கணக்கீட்டில் ஏற்பட்ட வேறுபாடுகள் போன்ற காரணங்களாலும் சிலசமயம் அதிக பில் வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.. இதுபோன்ற பிரச்சினைகளை குறைக்க குறைந்த அழுத்த மின் இணைப்புகளுக்கான பில்லிங் சாப்ட்வேரிலும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், தவறான மீட்டர் ரீடிங் எடுத்தது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது... செல்போன் ஆப் மற்றும் புளூடூத் மூலம் தானாக பதிவாகும் மீட்டர் ரீடிங்குகளுக்கும் இந்த நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வழக்கத்தைவிட அதிகமாக கரண்ட் பில் வந்தால் பொதுமக்கள் பதற்றப்படாமல், முதலில் மின் வாரியத்திடம் புகார் தெரிவித்து மறு ஆய்வு செய்ய கேட்டுக் கொள்ளலாம்.. மின்சார வாரியத்தின் இந்த அதிரடி ஆக்ஷனுக்கெல்லாம் காரணம், சரியான பில் மட்டுமே வசூலிக்கப்படுவதை உறுதி செய்வதுதான்..!!!


Click it and Unblock the Notifications
