தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட்! தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சல்! மு.க ஸ்டாலின்
சென்னை: தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி அளவுக்கு வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஆலை தொடங்க உள்ளது. வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்வது தொழில் வளர்ச்சியின் பெரும் பாய்ச்சல் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் வர்த்தக மையத்தில், தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நாளை தொடங்குகிறது. இதனை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் 30,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ள பதிவு செய்துள்ளார்கள். இதேபோல் 450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கு கொள்வார்கள்.

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ல் மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் உள்பட தேசிய மற்றும் உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், தலைமை நிர்வாகிகள், மற்றும் பலர் சிறப்புரையாற்றுவார்கள்.
நாளை தொடங்கும் இந்த மாநாட்டில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீட்டில் ஆலை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இதனால் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஆலை தொடங்க உள்ளது குறித்து ட்விட் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்வது தொழில் வளர்ச்சியின் பெரும் பாய்ச்சல் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான @VinFastofficial தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் #EVCar மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை VinFast நிறுவனம் அமைக்கவுள்ளது. இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்!
தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் @VinFastofficial நிறுவனத்தாருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள்! #TNGIM2024-இல் இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications