இரவில் ஜெனரேட்டர் பயன்படுத்துங்க! மின்சார வாரியத்தின் கோரிக்கையால் அதிர்ச்சியில் தொழிற்சாலைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) வைத்துள்ள ஒரு புதிய வேண்டுகோள், தற்போது தொழில் முனைவோரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாலையில் மின்சாரத் தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில், அரசு மின்சாரத்தைப் பயன்படுத்துவதை விடுத்து, தொழிற்சாலைகள் தங்களது சொந்த ஜெனரேட்டர்களை இயக்கிக் கொள்ள வேண்டும் என்று மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாகவே இந்தத் தகவல் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உயர் அழுத்த மின் நுகர்வோருக்கு குறுஞ்செய்திகளாகவும், வாய்மொழி வேண்டுகோளாகவும் அதிகாரிகளால் அனுப்பப்பட்டு வருகிறது.

EB tneb TANGEDCO

கோரிக்கை என்ன?

பொதுவாக மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வீடுகளிலும், வணிக வளாகங்களிலும் மின்சாரத்தின் பயன்பாடு உச்சத்தில் இருக்கும். இதனை 'பீக் ஹவர்ஸ்' என்பார்கள். இந்த நெரிசல் மிகுந்த நேரத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கவும், மின் விநியோகக் கட்டமைப்பைச் சீராகப் பராமரிக்கவும் மின்சார வாரியம் தீவிரமாக யோசித்து வருகிறது.

இதன் காரணமாக, பெரிய தொழிற்சாலைகள் இரவு 7 மணி முதல் 10 மணி வரையோ அல்லது 7 மணி முதல் 9 மணி வரையோ மின்சார வாரியத்தின் மின் இணைப்பைத் தவிர்த்து, தாங்களாகவே ஜெனரேட்டர்களை இயக்கிக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டு வருகின்றனர்.

தொழில் துறையினர் அதிர்ச்சி அடையக் காரணம் என்ன?

மின்சார வாரியம் இதனை ஒரு கட்டாய உத்தரவாகப் பிறப்பிக்காமல் அன்பான கோரிக்கையாகவே முன்வைத்துள்ளது. மின் நுகர்வோரும் உடனடியாக "முடியாது" என்று மறுக்கவில்லை. ஆனாலும், இந்த யோசனை நடைமுறைக்குச் சாத்தியமா என்பதில் அவர்களுக்குக் கடுமையான கவலை எழுந்துள்ளது.

ஒரு தொழிற்சாலையை ஜெனரேட்டரில் இயக்குவது என்பது நினைப்பது போல் எளிய விஷயம் அல்ல. அதற்கு ஆகும் டீசல் செலவு உற்பத்திச் செலவை மிகக் கடுமையாக உயர்த்திவிடும்.

யூனிட் கட்டண வித்தியாசம்: அரசு வழங்கும் வழக்கமான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு சராசரியாக 7 ரூபாய் செலவாகிறது என்றால், அதே மின்சாரத்தை ஜெனரேட்டர் மூலம் டீசல் போட்டு உற்பத்தி செய்யும்போது யூனிட்டுக்கு 16 ரூபாய் வரை செலவாகிறது என்று ஃபவுண்டரி (Foundry) உரிமையாளர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

தொழில்நுட்ப சிக்கல்: பணம் மட்டுமே இங்குப் பிரச்சினை அல்ல. ஃபவுண்டரிகள் போன்ற கனரகத் தொழில்களில் வெப்ப உலைகளை இயக்க சீரான மற்றும் அதிக சக்தி கொண்ட மின்சாரம் தேவை. ஜெனரேட்டர்களில் இருந்து வரும் மின்சாரம் அத்தகைய பெரிய உற்பத்தி வேலைகளுக்கு முழுமையாகத் துணை நிற்காது.

நூல் மில்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் நிலைப்பாடு

இந்த விவகாரம் குறித்து பல்வேறு நிறுவன தலைவர்கள் பேசுகையில், டீசல் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தும்போது மொத்த உற்பத்திச் செலவு யூனிட்டுக்கு கிட்டத்தட்ட 30 ரூபாய் வரை எகிறிவிடும் என்று எச்சரிக்கின்றனர்.

ஏற்கனவே வெளிநாட்டுப் போட்டிகள், மூலப்பொருள் விலை உயர்வு போன்ற நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் உற்பத்தித் துறைக்கு, இந்த கூடுதல் செலவு தாங்க முடியாத சுமையாக மாறும்.

எனவே, தனியான மின்பாதை வைத்திருக்கும் பெரு நிறுவனங்களுக்கு எந்தவித மின்வெட்டும் இல்லாமல் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்றும், ஜெனரேட்டர் இயக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள மற்ற நிறுவனங்களுக்கு டீசல் வாங்குவதற்கு அரசு உரிய நிதி உதவி அல்லது மானியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சவுத் இந்தியா மில்ஸ் சங்கம் (SIMA) கூறுவது என்ன?

தென்னிந்திய மில்கள் சங்கம் SIMA) இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில்:

"இது தற்காலிகமாக ஏற்பட்டுள்ள ஒரு சூழலாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். விரைவில் அரசு இதற்குத் தீர்வு காண வேண்டும். தற்காலிகமாக நிறுவனங்கள் மாற்று வழிகளுக்கு மாற வேண்டும் என்றால், அதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும், தமிழ்நாடு அரசும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையிலான சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும்" என்று கூறி உள்ளது.

தமிழக மின்வாரியம் நீண்ட கால அடிப்படையில் தனியார் நிறுவனங்களுடன் போட்டிருந்த மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் அடுத்த ஆண்டு முடிவுக்கு வர உள்ளன. அவை முடிவடையும்போது மாநிலத்தில் மின்சாரத் தேவை மேலும் அதிகரிக்கும். எனவே, கடைசி நேரத்தில் தட்டுப்பாடு வராமல் தடுக்க, அரசு இப்போதே முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து வெளிச்சந்தையில் இருந்தோ அல்லது பிற வழிகளிலோ தேவையான மின்சாரத்தை உடனடியாகக் கொள்முதல் செய்ய ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளது.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிதான் லட்சக்கணக்கான குடும்பங்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது. மாலையில் மின் தேவையைச் சமாளிக்க மின்சார வாரியம் படும் கஷ்டம் ஒருபுறம் இருந்தாலும், அதற்கான சுமை தொழிற்சாலைகள் மீது விழும்போது பொருள்களின் விலையும் உற்பத்திச் செலவும் உயரும் அபாயம் உள்ளது. அரசு விரைந்து மின் உற்பத்தியையும் கொள்முதலையும் சீர்செய்து, தொழில்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு இல்லாத நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+