TNPSC: குரூப் 2, குரூப் 2 தேர்வில் குளறுபடி.. 5 அலுவலர்கள் அதிரடி சஸ்பெண்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 8 ம் தேதி குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் திடீரென்று ஏற்பட்ட குளறுபடியால் அந்த தேர்வுகள் ரத்தாகின. இந்நிலையில் தான் குரூப் 2, 2ஏ தேர்வில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணம் என்று கூறி 5 அலுவலர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) மேற்கொண்டு வருகிறது.
குரூப் 2 பிரிவில் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் உள்பட பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 828 பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு 2025 ஜூலை மாதம் டின்பிஎஸ்சி வெளியிட்டது.

குரூப் 2 தேர்வு
இதற்கான முதல்நிலைத் தேர்வு 2025 செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அதன் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதில் குரூப் 2 பதவிகளில் 1,126 பேரும், குரூப் 2ஏ பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்றவர்களாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இவர்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வுகள் கடந்த 8 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னையில் குழப்பம்
சென்னை முதல் கன்னியாகுமரி வரை தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. சென்னையில் மட்டும் அரும்பாக்கம், நந்தனம் உள்ளிட்ட 7 மையங்களில் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் நடக்கவிருந்தது. ஆனால் திடீரென தேர்வு மையங்கள் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனால் தேர்வர்கள் குழம்பி போயினர். அதுமட்டுமின்றி நந்தனம் தேர்வு மையத்தில் வினாத்தாள் செல்வில்லை.
ரத்தான தேர்வு
இதனால் அதிருப்தியடைந்த தேர்வர்கள் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து குளறுபடி காரணமாக குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்வர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வுகள் மார்ச் 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை, மதிய வேளையில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அடுத்தடுத்து நடவடிக்கை
மேலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் அதற்கான காரணம் குறித்து டிஎன்பிசிஎஸ்சி சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சண்முகசுந்தரம் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக வெங்கடபிரியா ஐஏஎஸ் அந்த பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டார்.
5 பேர் சஸ்பெண்ட்
இந்நிலையில் தான் இன்று தற்போது 5 அலுவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி டிஎன்பிஎஸ்சி சார்பில் 2 உதவி பிரிவு அலுவலர்கள், 2 பிரிவு அலுவலர்கள் மற்றும் ஒரு சார் செயலாளர் என 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் துணை செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட நடவடிக்கையில் குளறுபடிக்கு இவர்கள் தான் காரணம் என்பது தெரியவந்ததால் டிஎன்பிஎஸ்சி இந்த நடவடிக்கையை தொடங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications
