டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில்.. ஆளுநரின் அதிகாரம் குறித்து பரபரப்பு கேள்வி.. என்னன்னு பாருங்க!
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடந்தது. இந்த தேர்வை 5,81,305 பேர் எழுதினர். இந்த நிலையில் நடந்து முடிந்த குரூப் 2 தேர்வில் ஆளுநர் ஆர் என் ரவி தொடர்பான கேள்வி கேட்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் ஏற்கனவே பல்வேறு விஷயங்களிள் முரண்பாடுகள் இருக்கும் நிலையில் குரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்து கேட்கப்பட்டுள்ள கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் தமிழகத்தில் உள்ள அரசு பணிகள் நிரப்பப்படுகின்றன. அவ்வப்போது உரிய அறிவிப்பினை வெளியிட்டு போட்டித்தேர்வு மூலமாக பணிகள் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் மொத்தம் 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டு இன்று காலை தேர்வு நடந்தது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருந்த 2,763 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வுகள் எந்தவித குளறுபடியும் இன்றி சுமூகமாக நடந்து முடிந்தது.
காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. இந்தத் தேர்வை எழுத மாநிலம் முழுக்க 7,93,966 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை. மொத்தம் 5,81,305 பேர் இந்த குரூப் 2 தேர்வை எழுதியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதாவது 73.22 சதவீதம் பேர் தேர்வு எழுதியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதன்படி பார்த்தால் ஒரு பணியிடத்திற்கு 210 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில் இன்று நடந்த முடிந்த குரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்த கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் ஏற்கனவே பல்வேறு விஷயங்களில் முரண்பாடுகள் இருக்கும் நிலையில் தமிழக அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்வில் ஆளுநரின் பணிகள் குறித்த கேள்வி கேட்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குரூப் 2 தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்ததாவது:-
சென்னையில் புதுசாக விட்ட தாழ்தள பஸ்களை மொத்தமாக மாற்ற எம்டிசி முடிவு.. பயணிகளுக்கு நல்ல செய்தி
கூற்று A. இந்திய கூட்டாட்சியில் ஆளுநர் அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என்னும் இருவிதமான பணிகளை செய்கிறார்.
காரணம் (R). ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது.
A. கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) தவறானது.
B. கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி. மேலும் கூற்று (A)க்கான சரியான விளக்கமாக காரணம் (R) உள்ளது.
C. கூற்று (A) தவறானது. ஆனால் காரணம் (R) சரி.
D. கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி.. ஆனால் கூற்று (A)க்கான சரியான விளக்கமாக காரணம் (R) இல்லை.
E. விடை தெரியவில்லை. என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுடன் பல்வேறு மோதல் போக்கினை கடைப்பிடித்து வரும் ஆளுநர் ஆர் என் ரவி அவ்வப்போது ஆளும் திமுக அரசினை விமர்சித்து பேசி வருகிறார். தமிழக அரசின் பாடத்திட்டங்கள் குறித்தும் விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் ஆளுநரின் பணிகள் குறித்த கேள்வி தமிழக அரசால் நடத்தப்படும் போட்டித்தேர்வில் கேட்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications