TNPSC குரூப் 4 கவுன்சிலிங் இன்று தொடக்கம்.. முதற்கட்ட கலந்தாய்வில் எவ்வளவு பேருக்கு வேலை கிடைக்கும்?
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி நியமன கவுன்சிலிங், சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்குகிறது. முதற்கட்டமாக சுமார் 7000 இடங்களை நிரப்ப, 8,500 பேர் கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குரூப்-4, குரூப்-2, க்ரூப்-2A, குரூப்-1 ஆகிய பிரிவுகளில் அடங்கிய பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக, கடந்த சில ஆண்டுகள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. 2022ஆம் ஆண்டு குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது.

அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 18 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த குரூப் 4 தேர்வை எழுதினர். இந்தத் தேர்வின் மூலம், 7 ஆயிரத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது.
குரூப் 4 தேர்வு முடிவு கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,219-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10219-ஆக உயர்த்தப்பட்டு, கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று (ஜூலை 20ஆம் தேதி) முதல் பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக குரூப் 4 தொகுதியில் வரும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவையாளர், பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதற்காக 8,500 பேர் கொண்ட பதிவெண் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அவர்களுக்கான கலந்தாய்வு அழைப்பும் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் நடைபெறும் கலந்தாய்வில் அவர்கள் பங்கேற்க உள்ளனர். தேர்வர்கள் ஏற்கனவே அனுப்பி வைத்த சான்றிதழ்களின் அடிப்படையில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, பணி ஒதுக்கீடு செய்யப்படும்.
முதற்கட்ட கவுன்சிலிங்கில், விஏஓ பதவிக்கு 425 இடங்கள், இளநிலை உதவியாளர் பணியில் 5,321 இடங்கள் வரி வசூலிப்பாளர் 69 இடங்கள், கள உதவியாளர் 20 இடங்கள் மற்றும் கிடங்கு காப்பாளர் 1 இடம் ஆகியவை நிரப்பப்பட உள்ளன. இதையடுத்து, 3,377 தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங் நடக்கும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications