நான் ரெடிதான் வரவா? நடிகர் விஜய் இன்று 2 வது நாளாக மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை - அரசியலா?
சென்னை: நடிகர் விஜய் நேற்று மக்கள் இயக்க நிர்வாகிகளுடனான ஆலோசனையை தொடங்கிய நிலையில், இன்று 2 வது நாளாக நிர்வாகிகள் சந்திப்பும் ஆலோசனையும் நடைபெற உள்ளது.
தொடர்ந்து பிசியாக நடித்து வரும் நடிகர் விஜய் புஸ்ஸி ஆனந்த் மூலமாக மக்கள் இயக்கத்தின் மூலமாக அரசியலுக்கு காய் நகர்த்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சுக்கள் எழுந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் இயக்க நிர்வாகிகளை களமிறக்கினார் விஜய்.

தற்போது லியோ படத்திற்கான படப்பிடிப்பை நிறைவு செய்து இருக்கும் விஜய், வேகமாக அரசியல் நோக்கி நகர்ந்து வருகிறார். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த ரசிகர்களை நடிகர் விஜய் கேட்டுக்கொண்டு இருந்தார்.
அப்போதே அவர் அம்பேத்கரை வைத்து அரசியலை தொடங்கி இருப்பதாக பேச்சுக்கள்எழுந்தன. அதன் தொடர்ச்சியாக காயிதே மில்லத், பாவேந்தர் பாரதிதாசன், தீரன் சின்னமலை, சிவந்தி ஆதித்தனார் போன்ற தலைவர்களின் பிறந்தநாளின்போதும் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
அதேபோல் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் விருந்து வழங்கி நலத்திட்ட உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கினர். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் ஒரு வேளை மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு விஜய் நேரில் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். விஜய் 12 மணி நேரத்துக்கும் மேலாக மேடையில் நின்றுகொண்டு மாணவர்கள், பெற்றோர்களிடம் நடந்துகொண்ட விதம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
கல்வி மாவட்டம், மாவட்டம், வட்டாரம், மாநில அளவில் பொதுத்தேர்வில் சாதித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கமாக உள்ள நிலையில், தொகுதி அளவில் விஜய் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கியது அரசியல் நகர்வாகவே பார்க்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், கர்மவீரர் காமராஜரை படியுங்கள் என்று மாணவர்களிடம் அறிவுறுத்திய விஜய் ஓட்டுக்கு பணம் வாங்குவது பற்றியும் பேசினார்.

அதை தொடர்ந்து சமீபத்தில் விஜய் பிறந்தநாளன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அதன் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பனையூர் இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அதில் அரசியலுக்கு வருவது தொடர்பாகவும் அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் 2 வது நாளாக நடிகர் விஜய் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். பனையூர் இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ஈரோடு மாவட்டங்களுக்கு உட்பட்ட தொகுதிகளின் பொறுப்பாளர்களை அவர் சந்தித்து பேச உள்ளார்.












Click it and Unblock the Notifications