"முடியல.." 10 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்.. 108 டிகிரியை தொட்ட சென்னை! மழை வந்தாலும் வெப்பம் குறையல
சென்னை: தமிழ்நாட்டில் மே மாதம் முடிந்த பிறகும் வெப்பம் வைத்துச் செய்து வரும் நிலையில், இன்று தலைநகர் சென்னையில் வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்டது. மாநிலத்திலும் பல இடங்களில் வெப்பம் சதமடித்தது.
இந்தாண்டு கோடைக் காலம் அதிக வெப்பமாக இருக்கும் என்று வல்லுநர்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்படியே மாநிலத்தில் பல இடங்களில் வெப்பம் தொடர்ச்சியாக உச்சம் தொட்டது.

மார்ச், ஏப்ரல் மாதங்களிலேயே பல இடங்களில் வெப்பம் சதமடித்தது. இது மே மாதம் அதிகரிக்கவே செய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மக்கள் மதிய நேரத்தில் வெளியே வரவே சிரமப்பட்டனர்.
வெப்பம்: மே மாதம் முடிந்துவிட்ட போதிலும் இன்னுமே வெப்பம் அதிகமாகவே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பல இடங்களில் மாலை நேரங்களில் நல்ல மழை பெய்தாலும் கூட மதிய நேரங்களில் வெப்பம் உச்சம் தொட்டே வருகிறது. கோடைக் காலம் முடிந்துவிட்ட போதிலும், மதிய நேரத்தில் வெப்பம் உச்சத்திலேயே இருந்து வருகிறது. நேற்றைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 18 இடங்களில் வெப்பம் சதமடித்திருந்தது.
இதற்கிடையே இன்றைய தினம் மொத்தம் 15 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. சென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்தாலும் கூட மதிய நேரத்தில் வெயில் உச்சத்திற்குச் சென்றுவிட்டது. இன்று தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பம் சென்னையில் தான பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 108.14 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஜூன் மாதம் சென்னை நுங்கம்பாக்கத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பம் இதுவாகும்.
10 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்: முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை 107.42 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் சனிக்கிழமை 107.78 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது. ஆனால், இன்று அதையெல்லாம் ஓவர்டேக் செய்யும் வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 108.14 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு பார்த்தோம் என்ரால் கடந்த 2014இல் ஜூன் மாதம் அதிகபட்சம் 107.24 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது. ஆனால், இந்தாண்டு அசாட்லாக அதையெல்லாம் ஓவர்டேக் செய்துவிட்டோம்.
அதேபோல சென்னை மீனம்பாக்கத்திலும் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. அங்கே இன்று 107.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. என்ன தான் மதிய நேரத்தில் வெப்பம் உச்சம் தொட்டாலும் அதன் பிறகுச் சற்றே வெப்பம் தணிந்து மழை வருவது சென்னைவாசிகளுக்கு சற்றே மகிழ்ச்சியாகவே இருக்கிறது. இன்றும் கூட மாநிலத்தில் பல இடங்களில் வானிலை சட்டென மாறி மழை கொட்டி தீர்த்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற இடங்கள்: சென்னையைப் போலவே தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் பல இடங்களில் வெப்பம் சதமடித்தது. சென்னையைத் தவிர்த்துப் பார்க்கும் போது வேலூர் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து திருத்தணியில் 106 டிகிரி பாரன்ஹீட் , கரூர் பரமத்தியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மதுரை நகரம் மற்றும் மதுரை விமான நிலையம் என இரண்டு இடங்களிலும் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து, சேலம் மற்றும் திருச்சியில் 102 டிகிரி பாரன்ஹீட்டும், ஈரோடு, தர்மபுரி, பாளையங்கோட்டை, திருப்பத்தூரில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது, கடலூர் 100.40 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல , புதுச்சேரியிலும் 102.57 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது












Click it and Unblock the Notifications