தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை.. இன்று நடைபெறவிருந்த மெகா தடுப்பூசி முகாம் ரத்து
சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த மெகா தடுப்பூசி முகாம், தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக அடுத்த வாரம் 14 ஆம் தேதிக்கு இந்த முகாம் ஒத்தி வைக்கப்படுகிறது.
Recommended Video
தடுப்பூசி முகாம் ஒத்தி வைக்கப்படுவது இது 2ஆவது முறையாகும். முதல் முறை ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என்ற நிலையில் மக்களுக்கு எளிதாக தடுப்பூசி கிடைக்க வாரந்தோறும் தடுப்பூசி முகாம்களை நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி முதல் தடுப்பூசி முகாம் தொடங்கியது. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த முகாமில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி 28.91 லட்சம் பேருக்கும், 19 ஆம் தேதி 16.43 லட்சம் பேருக்கும், 26 ஆம் தேதி 25.04 லட்சம் பேருக்கும், அக்டோபர் 3 ஆம் தேதி 17.04 லட்சம் பேருக்கும், கடந்த 10 ஆம் தேதி 22.85 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கடந்த 23 ஆம் தேதி 22.33 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 7 மெகா தடுப்பூசி முகாம்களில் ஒரு கோடியே 57 லட்சத்து 13 ஆயிரத்து 382 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் நடைபெறவிருந்த தடுப்பூசி முகாமை ரத்து செய்வதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தை அடுத்த காரைப்பேட்டையில் உள்ள அண்ணா நினைவு புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அவர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பேசுகையில் இன்று நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஒத்தி வைக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழையும் இன்று தீவிரமாக இருக்கும் என்கிறார்கள். எனவே அடுத்த வாரம் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.
தமிழகத்தில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 65 லட்சம் பேர் செலுத்தாமல் உள்ளனர். அவர்கள் இந்த முகாமை பயன்படுத்த வேண்டும். தடுப்பூசி முகாம்தான் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டம் தொடரும் என்றார்.












Click it and Unblock the Notifications