ஆக்ஷன் மட்டும் கொடுக்க சொல்லி பிராடு வேலை பண்ணிட்டாங்க.. திமுகவில் சேரல! திருவொற்றியூர் தவெக பெண்
சென்னை: சென்னை திருவொற்றியூரில் தவெக தொண்டர்கள் சிலர், திமுகவில் இணைவது போன்ற காட்சிகள் இணையத்தில் பரவியது. மேலும், தங்கள் கட்சி துண்டுகளை மாற்றி திமுக துண்டை அணிவது போலவும், ஒரு சிலர் தங்கள் தவெக உறுப்பினர் அட்டையும் கிழிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இந்த நிலையில் இந்த வீடியோ எல்லாம், பொய் என்றும், ஆக்ஷன் மட்டும் கொடுக்க சொல்லி இப்படி பிராடு வேலை பண்ணிட்டாங்க என்று தவெக பெண்கள் சிலர் பேட்டி அளித்துள்ளனர்.
தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தவெக என்ற கட்சியை தொடங்கியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என்று அறிவித்துள்ள விஜய், கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். கைவசம் இருந்த ஜனநாயகன் படத்தின் சூட்டிங்கும் முடிந்துவிட்டதால், தற்போது நிர்வாகிகள் நியமனம் உள்பட கட்சி பணிகளில் வேகம் காட்ட தொடங்கியுள்ளார்.

திமுகவில் இணந்த தவெகவினர்?
விரைவில் தமிழ்நாடு முழுக்க விஜய் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விஜய் கட்சியில் உறுப்பினர்கள் எண்ணிக்கை.. 1 கோடியை தாண்டிவிட்டதாகவும் மேலும் உறுப்பினர்களை சேர்க்க கட்சி நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இது ஒருபக்கம் இருக்க தவெகவில் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை எனவும் சிலர் வெளியேறி வருகிறார்கள்.
இந்த நிலையில் தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து இருப்பதாக சில இளைஞர்களும் இளம்பெண்களும் கட்சியின் உறுப்பினர் அட்டையை கிழித்து போடும் காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் வைரல் ஆகின. இதற்கு தவெகவினரும் பதிலடி கொடுத்தனர். திமுக அனுதாபிகளாக இருப்பவர்களே இப்படி வேண்டும் என்றே வீடியோக்கள் போடுவதாக தவெகவினர் பதிலடி கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில், சென்னை திருவொற்றியூரில் தவெக தொண்டர்கள் சிலர், திமுகவில் இணைவது போன்ற காட்சிகள் இணையத்தில் பரவின. தங்கள் கட்சி துண்டுகளை மாற்றி திமுக துண்டை அணிவது போலவும், ஒரு சிலர் தங்கள் தவெக உறுப்பினர் அட்டையும் கிழிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இது குறித்து முன்னணி ஊடகங்களில் செய்தி வெளியானது.
லோன் தருவதாக சொல்லி
இதனைப்பார்த்த அந்த வீடியோவில் இடம் பெற்று இருந்த சில பெண்கள், லோன் வாங்கி தருவதாக எங்களை அழைத்து சென்று இப்படி செய்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். நாங்கள் விஜய் கட்சியில் தான் இருக்கிறோம் என்றும், நாங்கள் திமுகவில் இணையவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளது. இது குறித்து பெண் ஒருவர் அளித்த பேட்டி வருமாறு:-
என் பெயர் செல்வராணி.. எனக்கு திமுகவில் இருந்து ஒரு அக்கா கால் பண்ணினாங்க.. மகளிர் உதவிக் குழுவில் இருந்து பேசுறோம்.. லோன் கேட்டிருந்தீங்க.. அதற்காக அழைத்து இருக்கிறோம் என்று சொன்னார். அங்க போனதும் நாங்க நார்மலாக உட்காந்திருந்தோம். அப்போது அங்கு இருந்த ஒரு தாத்தா வந்து தவெக கட்சியில் இருந்து திமுகவில் இணைகிறார்கள் என்று சொன்னார். எங்களுக்கு அப்போ ஒன்னுமே புரியல.
பிராடு வேலை பண்ணிட்டாங்க
கொஞ்ச நேரத்தில் எங்களை ஏமாற்றி பிராடு வேலை பண்ணிட்டாங்க.. நாங்க தவெகவில் இருந்து விலகவே இல்ல. ஆனால் நாங்க தவெகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தது போல வீடியோ எடுத்துட்டாங்க.. லோன் மீட்டிங் என்று சொல்லி அழைத்து ஏமாத்திட்டாங்க.. தவெகவின் துண்டை முதலில் எங்க தோளில் போட்டுவிட்டு பிறகு அதனை எடுத்துவிட்டு, திமுகவின் துண்டை எங்கள் தோளில் போர்த்தினார்கள். உறுப்பினர் கார்டை கிழிப்பது போனும் வீடியோவை எடுத்துவிட்டார்கள். எங்களால் அந்த இடத்தில் ஒன்னும் செய்ய முடியாமல் போனது.. என்று அந்த பெண் கூறினார்.
மற்றொரு பெண் கூறுகையில், "எனக்கு தவெக உறுப்பினர் கார்டே இல்லை.. இன்னும் எனக்கு தவெகவில் இருந்து உறுப்பினர் கார்டே வரவில்லை. ஆனால் எனக்கு தவெக உறுப்பினர் கார்டு போல ஒன்று கொடுத்தாங்க.. இதை ஏன் என்னிடம் தருகிறீர்கள் என்று கேட்டோம்.. கொஞ்ச நேரம் கழிச்சி விஜய் கட்சியின் துண்டை கொண்டு வந்து எங்கள் தோளில் போட்டுக்கொள்ளுமாறு சொன்னாங்க.. அதற்கு ஏன் இப்படி செய்யனும் என்று கேட்டதற்கு சும்மா போடுங்கம்மா.. ஒன்னும் இல்ல.. பயப்பட வேண்டாம் என்று சொன்னாங்க..
ஆக்ஷன் மட்டும் கொடுக்க சொன்னாங்க
அப்போது நாங்க விஜய் கட்சியில் தான் இருக்கோம். எங்களுக்கு விஜய் அண்ணாவை தான் பிடிக்கும். நீங்க ஏன் இப்படி செய்றீங்க என்று சொன்னோம்.. அப்போது இது எல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது.. உங்க தோளில் இருக்கும் துண்டை எடுத்துட்டு திமுக துண்டை போடுவது போன்றும், இந்த பேப்பரை கிழிப்பது போலவும் ஒரு ஆக்ஷன் மட்டும் கொடுங்க.. வீடியோ மட்டும் எடுத்துக்கிறோம் என்று சொன்னார்கள்..
நாங்க நிறைய வாட்டி சொல்லிட்டோம்.. ஆனால் அவங்க கேக்கல.. நாங்களும் எங்களை பாதுகாக்க அப்படியே ஒன்னும் சொல்லாம இருந்துட்டோம்.. மற்றபடி நாங்க விஜய் அண்ணா கட்சி தான். விஜய் கட்சியில் இருந்து வெளியில் போக மாட்டோம். திமுகவில் நாங்கள் சேரவில்லை என்று அந்த பெண் கூறினார். இந்த வீடியோவை பகிர்ந்து தவெகவினர் திமுகவுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications