ஸ்ரீபெரும்புதூரில் சுங்கச்சாவடி இல்லாத பயணம்.. வரவேற்கும் வாகன ஓட்டிகள்.. அறிய வேண்டியவை
சென்னை: ஸ்ரீபெரும்புதூரை அடுத்த நெமிலி சுங்கச்சாவடியில் தடையில்லா சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. அதேநேரம் ஒரு நடைமுறை சிக்கலும் உள்ளது. ஸ்ரீபெரும்புதூர், பரனூரில் உள்ள தனியாங்கி சுங்கச்சாவடியில் பாஸ்டேக்கில் போதுமான பணம் இல்லை என்றாலோ செல்லாத பாஸ்டேக் வைத்திருந்தாலோ அல்லது பாஸ்டேக்கை எடுத்து ஒளித்து வைத்துக்கொண்டு கடந்தாலோ சுங்கக்கட்டணத்தை போல் இருமடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தேசிய நெடுஞ்சாலையில் படிப்படியாக சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க தானியங்கி நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது. கடும் போக்குவரத்து நெரிசல்லை கட்டுப்படுத்தும் நோக்கிலும், சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் தடையற்ற சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறை படிப்படியாக அமலுக்கு வருகிறது..

சுங்கச்சாவடிகளில் தடுப்புகள் எதுவும் இல்லாமல் தானியங்கி கேமராக்கள் மூலம் வாகனங்களின் நம்பர் பிளேட் மற்றும் பாஸ்டேக் போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கும் முறை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது.
பரனூரில் அறிமுகம்
இந்த தடையற்ற தானியங்கி சுங்கக்கட்டணம் நடைமுறை தமிழகத்தில் முதல் முறையாக செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் தற்போது வாகனங்கள் எந்தவித காத்திருப்பும் இல்லாமல் தானியங்கி முறையில் சுங்கக்கட்டணம் செலுத்தி விட்டு செல்கிறார்கள். இதனால் அந்த பகுதிகளில் வாகன நெரிசல் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீபெரும்புதூரில் அமலுக்கு வந்தது
இதனை சென்னை செல்லும் வாகன ஓட்டிகள் வெகுவாக வரவேற்றுள்ளனர். அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இந்த நடைமுறையை கொண்டு வரவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தார்கள். அதன்படியே சென்னைக்கு மிக நெருக்கமான மற்றொரு சுங்கச்சாவடியான ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நெமிலி சுங்கச்சாவடியில் தடையில்லா சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறை நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்திருக்கிறது.
நெமிலி சுங்கச்சாவடி
இதனால் வழக்கமான சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படாது. தமிழகத்தில் தடையில்லா சுங்கக்கட்டண வசூல் முறை பரனூரை தொடர்ந்து நெமிலி சுங்கச்சாவடியில் வந்துள்ளதற்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. எனவே படிப்படியாக அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இந்த நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது.
72 மணி நேரம் டைம்
விரைவில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜா அருகே உள்ள சென்னைசமுத்திரம் சுங்கச்சாவடியிலும் சோதனை ஓட்டங்களுக்கு பிறகு இந்த திட்டத்தை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் பாஸ்டேக்கில் போதுமான பணம் இல்லை என்றாலோ செல்லாத பாஸ்டேக் வைத்திருந்தாலோ சுங்கக்கட்டணத்தை போல் இருமடங்கு அபராதம் விதித்து மின்னணு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எனினும் மின்னணு நோட்டீஸ் வந்த 72 மணி நேரத்திற்குள் பணம் செலுத்தினால் வழக்கமான சுங்கக் கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டும். 72 மணி நேரத்திற்குப் பிறகும் செலுத்தாவிட்டால் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல் நோட்டீஸ் வந்த 72 மணி நேரத்திற்குள் ஆட்சேபனையும் தெரிவிக்கவும் முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவல்துறை நடவடிக்கை
வேறு வாகனத்தின் பதிவு எண்ணுடன் இணைக்கப்பட்ட FASTag-ஐப் பயன்படுத்துவது, தவறான வாகனப் பதிவு எண்ணைப் பயன்படுத்துவது அல்லது நம்பர் பிளேட்டை மறைத்துச் செல்வது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டாலும் தப்ப முடியாது. ஏனெனில், ANPR தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் வாகனத்தின் நம்பர் பிளேட்டைப் பதிவு செய்வதுடன், VAHAN தரவுத்தளத்தில் உள்ள விவரங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கவும் உதவும். இதுபோன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மீது போக்குவரத்துத் துறை அல்லது காவல்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.




Click it and Unblock the Notifications
