உளுந்தூர்பேட்டை டூ பரனூர்... 142 கிமீக்கு நான்கு சுங்கச்சாவடிகள்.. தீராத வாகன ஓட்டிகளின் கவலை
சென்னை: சென்னையின் தெற்கு மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பரனூர், ஆத்தூர், விக்கரவாண்டி சுங்கச்சாவடிகளுக்கு இடையே குண்டும் குழியுமாக பள்ளங்களுடன் சாலை இருக்கிறது என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
தலைநகரமான சென்னை தமிழ்நாட்டின் கடைசியில் இருப்பதால் , 95 சதவீதம் மக்கள் ஒரே சாலையை பயன்படுத்துகிறார்கள்.. அது ஜிஎஸ்டி சாலை தான். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையான என்ஹெச் 45 தமிழ்நாட்டின் மிகமிக முக்கியமான சாலை.. இந்த சாலை சென்னையில் இருந்து திருச்சி, திண்டுக்கல், தேனி வழியாக கேரளாவை நோக்கி செல்கிறது. திருச்சி, மதுரை, திருநெல்வேலி மார்க்ககமாக செல்லும் வாகனங்களும், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட வாகனங்களும் உளுந்தூர்பேட்டையில் இணைகின்றன. அதன்பின்னர் வாகன நெருக்கம் கடுமையாக இருககும். சரியாக உளுந்தூர் பேட்டையில் இருந்து 206 கிலோ மீட்டர் தூரத்தில் சென்னை இருக்கிறது..

இதில் வாகனங்கள் உள்ளே நுழையும் போதே உளுந்தூர்பேட்டையின் வெளிப்பகுதியான செங்குறிச்சியில் சுங்கச்சாவடி இருக்கிறது. இந்த சுங்கச்சாவடி தான் மிக அதிகமான வாகனங்கள் ஒரே நேரத்தில் வரும் இடமாக உள்ளது. அதன்பிறகு விக்கிரவாண்டியில் ஒரு சுங்கச்சாவடி இருக்கிறது. இதேபோல் திண்டிவனம் அருகே சுங்கச்சாவடி இருக்கிறது. அதன்பிறகு சென்னையின் நுழைவு வாயிலான பரனூரில் இருக்கிறது.
இந்த சுங்கச்சாவடி கட்டப்பட்டு 15 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில்.. சுங்கச்சாவடியும் தற்போது ஊருக்குள் வந்துவிட்டது.. ஆனால் இன்னமும் மூடப்படாமல் இருக்கிறது. பலமுறை மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் சுங்கச்சாவடி மூடப்படவே இல்லை.. அதேநேரம் சேலத்தை அடுத்த ஆத்தூர் தொடங்கி பரனூர் வரை சாலைகள் பல இடங்களில் குண்டும் குழியுமாக பள்ளமாக காணப்படுகிறது. சுங்க கட்டணம் மக்கள் செலுத்திய போதும், சாலைகள் தரமாக இல்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.
60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்கிற விதி இருக்கும் நிலையில் உளுந்தூர் பேட்டையில் இருந்து பரனூர் இடையே வெறும் 145 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் எப்படி என்றால், சுங்கக்கட்டணத்தில் இருந்து ஒவ்வொரு நகர மக்களும் தப்பிவிடக்கூடாது என்ற வகையில், உளுந்தூர் பேட்டை, விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு என எந்த ஊரில் இருந்து சென்னை வந்தாலும் கண்டிப்பாக சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் செலுத்திய பின்னரே போக வேண்டும் என்கிற வகையில் மிக முக்கியமான இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் சுங்க கட்டணம் செலுத்தும் மக்களுக்கு சாலைகள் அந்த அளவிற்கு தரமானதாக இல்லை என்பதே மக்களின் புகாராக உள்ளது. இந்த விவகாரத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே பொங்கல் முடிந்து சொந்த ஊரில் இருந்து பலரும் சென்னை திரும்பியதால் சுங்கச்சாவடிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications