இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 13/02/2026: எடப்பாடி பழனிசாமி முதல் விஜய் வரை! தலைவர்களின் கருத்துகள்
சென்னை: தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு ரூ 5000 வரவு வைக்கப்பட்டது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை முன் வைத்துள்ளார்கள்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தேர்தலை காரணம் காட்டி முடக்கப்பட்டால் என்ன செய்வது என்பதை யோசித்த முதல்வர் ஸ்டாலின், மற்ற மாதங்களுக்கும் சேர்த்து முன்கூட்டியே பணத்தை வரவு வைத்துவிட்டதால் பயனாளிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து தலைவர்கள் என்ன மாதிரியான கருத்துகளை தெரிவித்துள்ளார்கள் என்பதை பார்க்கலாம்.
முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
எடப்பாடி பழனிசாமி
மாதம் ரூ 2000 என்று நான் அளித்த அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும், பயத்தில் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது, பாருங்கள் மக்களே
உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு என்றால் மகளிர் நாடு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் அரசு!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
மகளிர் உரிமைத் தொகையும் கோடைக் கால சிறப்பு நிதியும் திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு. நாங்கள் மகளிர் உரிமைத் தொகையாக ரூ 2000 கொடுப்போம் என்றோம். அதைத்தான் ஸ்டாலின் இப்போது அறிவித்துள்ளார்.
தமிழிசை சவுந்திரராஜன்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த திட்டத்தை வேண்டுமானாலும் அறிவிக்கட்டும்... ஆனால் மறுபடியும் மத்திய அரசு இதை முடக்க பார்க்கிறது என்று சொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை... இது தர்மத்திற்கு எதிரானது.
திருமாவளவன்
மகளிர் வங்கிக் கணக்கில் 5 ஆயிரம்! உரிமைத் தொகை 2 ஆயிரமாக உயர்த்தப்படும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பை வரவேற்கிறோம்!
அன்புமணி
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் திமுக அரசு திடீரென ரூ.5 ஆயிரத்தை வரவு வைத்திருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கி வந்த திமுக அரசு, பிப்ரவரி மாதத்திற்கான தொகையுடன், மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ரூ.2 ஆயிரத்தை முன்பணமாகவும், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரமும் சேர்த்து இந்த தொகை வரவு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. ஆட்சி கையை விட்டுப் போவது உறுதியானதை உணர்ந்து கொண்ட திமுக, தோல்வியின் வெளிப்பாடாகவே இதைச் செய்திருக்கிறது.
ஜோதிமணி எம்பி
மகளிர் வங்கிக் கணக்கில் ரூ 5000 வரவு வைக்கப்பட்டதும் எதிர்காலத்தில் உரிமைத் தொகையை ரூ 2000 ஆக உயர்த்துவேன் என முதல்வர் அறிவித்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அடுத்த 2 மாதங்களுக்கு தடுக்க முயற்சி செய்த பாஜக, அதிமுகவின் சதியை முதல்வர் முறியடித்துள்ளார்.
கார்த்தி சிதம்பரம்
மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே விடுவித்த முதல்வர் ஸ்டாலினின் செயலை முழு மனதுடன் வரவேற்கிறோம்.
விஜய்
என் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்த உரிமைத் தொகையை சந்தோஷமாக வாங்கிக் கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications