பட்டினப்பாக்கம் கடலோரத்தில் நுரை நுரையாய் வந்த அலைகள்.. அதிர்ந்த மீனவர்கள்.. என்னாச்சு? காரணம் என்ன?
சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் அதிகளவில் நுரை வெளியேறி வருகிறது. பட்டினப்பாக்கம் கடற்கரை முதல் ஸ்ரீனிவாசபுரம் கடற்கரை வரை சுமார் 1 கிமீ தூரத்திற்கு வெண் நுரை வெளியேறி வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் அடையாறு கூவம் ஆற்றின் வழியாக கடலில் கலக்கிறது. இது ரசாயனம் கலந்த நச்சு நுரை என்றும், இந்த நச்சு நுரை அப்பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் அதிகரித்து வருகிறது. ஏரிகள், குளங்களில் தண்ணீர் அதிகரித்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கும் வினாடிக்கு 2,220 கன அடி நீர் வரத்து அதிகரித்ததால் நேற்று மாலையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்துவிடப்பப்படும் தண்ணீரின் காரணமாக பட்டினப்பாக்கம் கடற்கரையில் நுரைகள் வெளியேறி வருகிறது. அதாவது, செம்பரம்பாக்கம் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது அடையாறு கூவம் ஆற்றின் வழியாக கழிவு நீரோடு கடலில் கலக்கிறது.
கூவம் ஆற்றில் ஆங்காங்கே பல மாதங்களாக தேங்கிக் கிடந்த கழிவு பொருட்கள், ரசாயன கழிவுகள் செம்பரம்பாக்கம் அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரோடு சேர்ந்து கடலில் கலக்கிறது. இதனால் பட்டினப்பாக்கம் கடற்கரையில் வெண் நுரை பொங்கி வருகிறது. மலைபோல் வெண் நுரைகள் உருவாகி பட்டினப்பாக்கம் முதல் சீனிவாசபுரம் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரையோரம் படர்ந்துள்ளது.
6 மாதங்களாக அங்கு தேங்கி கிடந்த கழிவுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலப்பதாலேயே இது போன்று வெண் நுரை வருவதாக கூறப்படுகிறது. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். வெண் நுரை வெளியேறி வருவது குறித்து அப்பகுதி மீனவர்கள் கூறியதாவது:-
இது இந்த வருஷம் மட்டும் வரவில்லை. மழைக்காலம் வந்தாலே இப்படித்தான் இங்கு வெண் நுரை வந்துகொண்டிருக்கிறது. கழிவு நீர் கலப்பதால் தான் இப்படி நுரை வருகிறது. கழிவு நீரை சுத்திகரித்து தான் வெளியில் விட வேண்டும். ஆனால் யார் அனுமதி கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இது போன்ற மழைக்காலங்களில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பிறகு தான் கழிவு நீரை வெளியில் விட வேண்டும்.
மழை நேரத்தில் மட்டும் கடலுக்கு போகாதீங்க.. மீன் பிடிக்காதீங்க என்று எச்சரிக்கை அறிவிப்பு சொல்கிறார்கள்.. 3 நாட்கள் கடலுக்கு போகாமல் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.. ஆங்கால் எங்களை பொறுத்தவரைக்கும் 3, 4 நாட்கள் முடிந்த பிறகு கடலுக்குள் சென்றாலும், இந்த கழிவு நீர் கடலில் கலப்பதால் அடுத்த 25 நாட்களுக்கு மீன் வளர்ச்சி இருக்காது. மீன்பிடிப்பதிலும் வருமானம் கிடைக்காது.
வருஷம் வருஷம் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதற்கு பெரிய நடவடிக்கை எடுத்தது போல் தெரியவில்லை என்றார். தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இந்த நுரை மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து சென்றிருக்கிறார்கள். இந்த நுரை பாதிப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications