8ஆம் தேதி கச்சேரி இருக்கு! கூட்டணிக் கட்சிகளை துணைக்கு அழைக்கும் டி.ஆர்.பாலு!
சென்னை: ஆளுநரை அழைத்து ஜனாதிபதி கண்டிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் பேசிய டி.ஆர்.பாலு, வரும் 8ஆம் தேதி அன்று நாடாளுமன்ற வளாகத்தில், திமுக எம். பி.க்கள் கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் நடத்துவோம் எனவும் கூறியுள்ளார். இது குறித்த டி.ஆர்.பாலு அறிக்கை வருமாறு;
ஒன்றிய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு புயல் வெள்ள நிவாரண நிதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாத ஓரவஞ்சனையைக் கண்டித்து எதிர்வரும் பிப்ரவரி 8 அன்று காலை 10.00 மணிக்கு திமுக மற்றும் தோழமைக் எம்.பி.க்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

31.1.2024 அன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரைத் துவக்கி வைத்து இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நேற்று (2.2.2024) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு திமுக சார்பில் பேசிய நான் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை குறித்து எனது கடும் கண்டனங்களை தெரிவித்தேன்.
குடியரசுத் தலைவர் தனது உரையில் அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் தான் எடுத்துக் கூறி உள்ளார். தனது சொந்த கருத்துக்கள் எதையும் சொல்ல வில்லை. அவரது உரை அரசு தயாரித்த உரை. அதனை குடியரசுத் தலைவர் முர்மு அச்சு பிறழாமல் கடைசி வார்த்தை வரை அப்படியே பேசி உள்ளார். அதுதான் மரபு. அதற்காக முர்மு அவர்களுக்கு நன்றி கூறியே ஆக வேண்டும். அதற்காக அவரது உரையில் பிரதிபலிக்கப்பட்டுள்ள, திமுகவின் கொள்கை கோட்பாடுகட்கு எதிரான ஒன்றிய அரசின் கொள்கைகள் செயல்பாடுகள் அனைத்தையும் திமுக ஏற்பதாக பொருள் அல்ல.
குடியரசுத் தலைவரைப் போல் அல்லாமல் பல ஆளுநர்கள் குறிப்பாக தமிழ்நாடு ஆளுநர் மாநில அரசு கொடுத்த உரையில் இல்லாத விஷயங்களைப் பேசினார். சில ஆளுநர்கள் மாநில அரசு தங்கள் அரசு என்பதை மறந்து எதிர்க் கட்சித் தலைவர்களுடன் போட்டி போடும் வகையில் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதை வழக்கமாகவே வைத்துள்ளனர். பிரிட்டிஷ் கால ஆளுநர்கள் போல தாங்கள் தான் அனைத்தம் அறிந்தவர்கள் என்ற போக்கில் செயல்படுகிறார்கள்.
அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மதிக்காமல் மக்கள் தீர்ப்பை காலடியில் போட்டு மிதிக்கும் விதத்தில் செயல் படுகிறகர்கள். அத்தகைய ஆளுநர்களை கண்டித்து அவர்களை அரசியலமைப்புச் சட்டத்தின படி பணியற்ற வைக்க குடியரசுத் தலைவர் முன்வர வேண்டு்ம் என்று நேற்று நான் பாராளுமன்றத்தில் பேசியது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications