கடை கடையாக வேவு பார்க்கும் ‘விஜய்’ போலீஸ்! போராட்டம் வெடிக்கும்! விக்ரமராஜா விடுத்த வார்னிங்!
சென்னை: 2000 ரூபாய்க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு சேவை வரியைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் வெடிக்கும் எனவும், வணிகர்களை வேவு பார்க்கும் வகையில் கடைக் கடையாகச் சென்று ஆய்வு செய்வதைத் காவல்துறையினர் தவிர்க்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் விக்ரமராஜா கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக புதிய சங்கங்கள் துவக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் விக்ரமராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," யுபிஐ பரிவர்த்தை செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள 0.4% சேவை வரியை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வரும் 29-ஆம் தேதி திருவண்ணாமலையில் போராட்டம் நடக்கவுள்ளது.
விக்ரமராஜா
மத்திய நிதி அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டப் போராட்டம் எப்போது என்பது குறித்தான முக்கிய முடிவு அறிவிக்கப்படும். தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு வருகிறது. 1 கிலோ அரிசி விலை ரூபாய் 100-ஐ எட்டியுள்ள இந்தச் சூழ்நிலையைப் பார்க்கும் போது ஒவ்வொரு வரியின் கணக்கீடே இந்த விலைவாசி உயர்வுக்கு முதன்மை காரணமாக உயருகிறது. எனவே மத்திய அரசு இதைக் கட்டுப்படுத்த உடனடியாக வழிவகை செய்ய வேண்டும்.
மாநில அரசு
மாநிலம் முழுவதும் உள்ள திருமண மண்டபங்களில் திருமணம் மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கு மட்டுமே மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டும். அதைத் தவிர்த்து மண்டபங்களை வாடகைக்கு எடுத்து வணிகக் கடைகள் நடத்துவதற்குத் தரப்படும் அனுமதியை உடனடியாகத் ரத்து செய்ய வேண்டும். பல்வேறு இடங்களில் திருமண மண்டபங்களில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். அரசு இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
காவல்துறை
காவல்துறையில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சில காவல்துறை அதிகாரிகள் வியாபாரிகளை வேவு பார்க்கும் வகையில் வேகமாகச் செயல்படுகிறார்கள். இந்நிலையை நிறுத்தி பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நடவடிக்கைகளில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும். கடைக் கடையாகச் சென்று ஆய்வு செய்வதைத் தவிர்க்க வேண்டும். அதேவேளையில், சில அதிகாரிகள் கையூட்டு பணம் பெறுவதற்கு வியாபாரிகளைப் பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறது.
வணிகர் சங்கப் பேரவை
கரூர் சம்பவத்தில் ஏறத்தாழ 41 பேர் உயிரிழந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை சார்பில் இதயப்பூர்வமான கண்ணீர் அஞ்சலி செலுத்திகிறோம். இடைத்தேர்தல் காலங்களில் வியாபாரிகள் வியாபாரத்திற்கான பொருட்களையோ பணத்தையோ எடுத்துச் செல்லக் கூடாது எனக் கெடுபிடி விதித்து அதிகாரிகளால் துன்புறுத்தப்படும் நிலை ஏற்க முடியாதது.
இடைத்தேர்தல் கட்டுப்பாடு
ஏற்கெனவே தேர்தல் காலங்களில் ஒரு மாத காலம் வியாபாரிகள் பெரும் அவஸ்தையைச் சந்தித்த நிலையில் மீண்டும் இடைத்தேர்தல் கட்டுப்பாடுகளை ஏற்பது கடினம். அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர சாமானிய வியாபாரிகள் பணம் எடுத்துச் செல்வதைத் தடுத்து நிறுத்தக் கூடாது என பேரமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்." என்றார்.


Click it and Unblock the Notifications
