சரக்கு ரயில் விபத்து.. சென்ட்ரலுக்கு பதில் அரக்கோணத்திலிருந்து ரயில்கள் புறப்படும்! - தெற்கு ரயில்வே
சென்னை: சென்னை சென்ட்ரல்-பெங்களூர் ரயில் வழித்தடத்தில், திருவள்ளூர் பகுதியில் சரக்கு ரயில் ஒன்று தீ விபத்தில் சிக்கியுள்ளது. இந்நிலையில், இன்றிரவு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட இருந்த ரயில்கள், சில அரக்கோணத்திலிருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது
அதன்படி கோவை, திருவனந்தபுரம் மற்றும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு பதில், அரக்கோணத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது,

சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ் (இரவு 10 மணி)
சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (இரவு 7.30)
சென்னை சென்ட்ரல் - அசோகபுரம் காவேரி எக்ஸ்பிரஸ் (இரவு 9.15)
ஆகிய ரயில்கள் சென்ட்ரலுக்கு பதில் அரக்கோணத்திலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. இதனால் பயணிகள் சிரமடைய வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் எழும்பூரிலிருந்து இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு மற்றும் புதிய கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், மன்னார்குடி, நாகை, வேளாங்கண்ணிக்கு செல்லும் ரயில்கள் தற்போது தாம்பரத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் இந்த ரயில்கள் பயணிகள் இல்லாமல் காற்று வாங்கி வருகிறது. வார இறுதி நாட்களில் வழக்கமாக இந்த ரயில்கள் கூட்டம் அலை மோதும். ஆனால், ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்படுவதால் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டிருக்கின்றனர்.
இதே நிலைமைதான் மேற்குறிப்பிட்ட மூன்று ரயில்களுக்கும் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. சென்ட்ரலிலிருந்து அரக்கோணம் போக 1 மணி நேரம் ஆகும். புறநகர் மின்சார ரயிலில் போக வேண்டும் எனில் 2 மணி நேரம் வரை ஆகும். இப்படி சிரமப்பட்டு போய், எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிப்பது கஷ்டமான காரியம். எனவே பயணிகள் பாதிக்கப்படுவார்கள்.
திருவள்ளூரில் என்ன நடந்தது?
மணலி ஐஓசி பகுதியிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசலை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று மைசூர் புறப்பட்டது. இந்த ரயில்களில் மொத்தம் 50 டேங்கர்கள் இருந்தன. 45 டேங்கர்களில் டீசலும், 5 டேங்கர்களில் பெட்ரோலும் இருந்திருக்கிறது. இந்த ரயில் அதிகாலை திருவள்ளூர் வந்தது. இங்கு ரயிலின் என்ஜின் தடம் புரண்டதால் டேங்கர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி தீ விபத்தை ஏற்படுத்தியது.
பெட்டோலால் ஏற்படும் தீயை அணைப்பது சற்று கடினமான காரியம். வழக்கமாக தீ எரிகிறது எனில், அதன் மீது தண்ணீர் ஊற்றப்படும்போது, தண்ணீர் தீயை மேலும் பரவ விடாமல் தடுக்கும். ஆனால் பெட்ரோல் எரியும்போது அதிலிருந்து வரும் வெப்பம், தீயை உடனடியாக ஆவியாக மாற்றிவிடும். மட்டுமல்லாது தண்ணீர் பெட்ரோலை விட அடர்த்தி அதிகம் என்பதால், தண்ணீர் கொண்டு தீயை அணைக்க முயன்றால் பெட்ரோல் மேலே தேங்கி நிற்கும். எனவே தீ அணையாது.
ஆகவே பெட்ரோல் மூலம் உண்டாகும் தீயை அணைக்க சிறப்பு தீயணைப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. திருவள்ளூர் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தை சுமார் 7 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்திருக்கிறார்கள். இருப்பினும் தண்டவாளத்தை விட்டு இந்த ரயில் டேங்கர்கள் அகற்றப்படவில்லை. எனவே சென்னை சென்ட்ரல்-பெங்களூர் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications