திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவித்த பயணிகள்
டெல்லி: ஐஆர்சிடிசி இணையதளம் இன்று காலை திடீரென 10 மணியளவில் முடங்கியது. இதனால், டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாததால் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர். ஏசி தட்கல் டிக்கெட் முன்பதிவு சமயத்தில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். திடீரென முடங்கியற்கான காரணம் எதுவும் ஐஆர்சிடிசி தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.
ரயில்களில் டிக்கெட்டுகளில் கவுண்டர்களுக்கு நேரில் சென்று எடுப்பது போல ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவும் எடுக்கலாம். டிக்கெட் கவுண்டர்களுக்கு நேரில் சென்று எடுப்பதால் பயண அலைச்சல், நேர விரயம் ஏற்படும் என்பதால், தற்போது பெரும்பாலான பயணிகள் ஐஆர்சிடிசி இணையதள்ம் வாயிலாகவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் திடீரென ஐஆர்சிடிசி இணையதளம் திடீரென முடங்கியது. காலை 10 மணியளவில் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி முடங்கியதால் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதில் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இணையதளங்கள் முடங்கியதை கண்காணிக்கும் downdetector.com - இணையதளம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 50 சதவீத யூசர்கள் ஐஆர்சிடிசி இணையதளத்தை அணுக முடியவில்லை எனவும், 40 சதவித யூசர்கள் செயலியை டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிரமத்தை எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஆர்சிடிசி இணையதளம் திடீரென முடங்கியதற்கான காரணம் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்கள் பலரும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் புக்கிங் செய்ய முடியவில்லை எர்ரர் காட்டியதாகவும் பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் ஸ்கிரீன் ஷாட்டுடன் வெளியிட்டு இருக்கும் பதிவில், ஐஆர்சிடிசி இணையதளத்தை நீண்ட நேரம் பயன்படுத்த முடியவில்லை. டிக்கெட் புக் செய்ய முடியாத நிலை உள்ளது" என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், 9.55 மணியில் இருந்து 10.14 மணி வரை காத்திருக்கிறேன். ஐ.ஆர்.சி.டிசி இணையதளத்திற்குள் செல்ல முடியவில்லை. ஏதேனும், டெக்னிக்கல் கோளாறா? என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், இன்று மட்டுமல்ல மூன்று நாட்களாக இப்படித்தான் உள்ளது என்று பதிவிட்டுள்ளார். எனினும் ஒரு மணி நேரத்திற்கு பிறகு இந்த பிரச்சினை சரியாகிவிட்டது. தற்போது ஐஆர்சிடிசி இணையதளம் இயங்கி வருவதாக பயனர்கள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications