டேமேஜ் ஆன பேருந்துகள் வேண்டாம்.. முழுமையாக பரிசோதித்த பிறகே இயக்கவேண்டும்: அமைச்சர் சிவசங்கர் ஆர்டர்
சென்னை: அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின்னரே இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு செல்லும் 59 தடம் எண் கொண்ட மாநகரப் பேருந்து ஒன்றில் நேற்று காலை ஏராளமான பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்து அமைந்தகரை ஸ்கைவாக் அருகே வந்துக்கொண்டிருந்த போது கடைசி இருக்கையின் கீழ் உள்ள பலகை திடீரென உடைந்தது. இதனால் அங்கு அமர்ந்திருந்த இளம்பெண் ஒருவர் அந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தார்.

கீழே விழுந்த பெண் அலறிய நிலையில், பயணிகளின் கூச்சலையடுத்து, பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டதால் காயங்களுடன் அதிஷ்டவசமாக அப்பெண் உயிர் தப்பினார். இதையடுத்து, அந்த பேருந்து கிளம்பிய பேசின் பிரிட்ஜ் பணிமனையை சார்ந்த பணியாளர்கள், பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், மிக மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறையில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பெருநகரில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை, பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்.
சென்னை அமைந்தகரையில் நேற்று மாநகர பேருந்தில் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து பெண் பயணி கீழே விழுந்த சம்பவத்தையடுத்து, எதிர்க்கட்சிகள் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications