“கஜானா காலி என்றால் எப்படி கார் தர முடியும்?” - திமுக முன்னாள் எம்.எல்.ஏ எழிலன் கேள்வி!
சென்னை: "கஜானா காலி எனக் கூறிவிட்டு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும் என அறிவிக்கின்றனர். கார் இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் கார் வழங்க வேண்டும். தேர்தல் வேட்புமனுவில் கார் இருப்பதாக தெரிவித்துள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கக் கூடாது." என திமுக முன்னாள் எம்.எல்.ஏ எழிலன் நாகநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என அறிவித்தார். வாகனப் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ. 75,000 வாகனப்படியும், தங்களது அலுவலகப் பணிகளுக்காக உதவியாளர் ஒருவரை நியமித்துக்கொள்வதற்கு ஊதியமாக மாதந்தோறும் ரூ. 25,000 வழங்கப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுக மருத்துவர் அணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எழிலன் நாகநாதன், "கஜானா காலி எனக் கூறிவிட்டு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும் என அறிவிக்கின்றனர். கார் இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் கார் வழங்கலாம். தேர்தல் வேட்புமனுவில் கார் இருப்பதாக தெரிவித்துள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கக் கூடாது." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய மருத்துவர் எழிலன், "மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை கலைஞர் தான் முதலில் தொடங்கி வைத்தார். 2021-2026 தி.மு.க ஆட்சிக் காலத்தில் மட்டும் 25 லட்சம் மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் வரம்பை ரூ.5 லட்சமாக திமுக ஆட்சிதான் உயர்த்தியது. 2,000க்கும் மேற்பட்ட சிகிச்சைகளுக்கு காப்பீட்டு திட்டத்தை திமுக அரசு விரிவாக்கம் செய்தது. 2,000 மருத்துவமனைகளுக்கு காப்பீட்டு திட்டத்தை திமுக அரசு விரிவாக்கம் செய்தது.
பட்ஜெட்டில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீடுக்கு ரூ.1,400 கோடிதான் ஒதுக்கி இருக்கிறீர்கள். இப்போது ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தும்போது காப்பீடு நிறுவனத்திற்கு நாம் கொடுக்க வேண்டிய தொகை ரூ.4,000 கோடியாக உயர்கிறது. இது எப்படி சாத்தியம்?
முதலமைச்சர் விஜய் இன்று வெளியிட்டுள்ள மூன்று அறிவிப்புகளும் கவர்ச்சிக்கான அறிவிப்புகள் ஆகும். இவை விளம்பரத்திற்காகவும், செய்திகளில் இடம் பெறுவதற்காகவும் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களை எல்லாம் எவ்வாறு செயல்படுத்தப் போகிறார்கள் என்பதை அவர்கள் தெளிவாக விளக்க வேண்டும். " எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "நமது சட்டப்பேரவையில் உள்ள 234 எம்.எல்.ஏக்களில் 190 எம்எல்ஏக்கள் கோடிகளில் சொத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஏழை, எளிய சாமானியர்களை சட்ட மன்றத்துக்குள் கொண்டு வந்திருப்பதாக சொல்லும் முதல்வர் விஜய், யார் கார் வைத்துள்ளனர், கார் இல்லை என வேறுபடுத்தி பார்த்து கார் வழங்கினால் உகந்ததாக இருக்கும்.
கஜானா காலி எனக் கூறிவிட்டு அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என அறிவிக்கின்றனர். தேர்தல் வேட்புமனுவில் யார் எல்லாம் கார் வைத்துள்ளனர்; அவர்களின் பொருளாதார நிலை பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். எனவே, அதை ஆராய்ந்து கார் இல்லாத எம்எல்ஏக்களுக்கு மட்டும் கார் வழங்க வேண்டும்.
500 யூனிட்டுகளுக்குள்தான் 200 யூனிட் இலவச மின்சாரம் பொருந்தும் என்று தவெக அரசு சொல்கிறது. 501 யூனிட்டுக்கு மேல் சென்றால், ஒரு யூனிட்டுக்கு ரூ.4 என்று கணக்கிடப்படுவதால்தான் தற்போது மின்கட்டணம் அதிகரித்துள்ளது. இப்படித் திட்டங்களைக் கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டு, மக்களிடம் பணத்தைச் சுரண்டுகிறார்கள். 110 விதியின் கீழ் வெற்று அறிவிப்புகளை அறிவிப்பது சட்டமன்றத்துக்கு தலைகுனிவு." என்றார்.


Click it and Unblock the Notifications
