உயரே பறக்குது "திருச்சி".. ஈரோடு, திருவள்ளூர், கோவை, சென்னையில் உச்சிக்கு போன அரிசி.. 1 கிலோ பாருங்க
சென்னை: டெல்டா மாவட்டங்களில் விலைகள் உயர்ந்து காணப்பட்ட அரிசி, தற்போது ஈரோடு, திருவள்ளூர் மாவட்டங்கள் உட்பட தமிழகமெங்கும் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் விழிபிதுங்கி வருகிறார்கள்.
கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே பருவமழை தவறிவிட்டது.. தண்ணீர் இல்லாத நிலையில் அக்டோபர் மாதமே மேட்டூர் அணையும் மூடப்பட்டுவிட்டது.. எனவே, கையிலிருந்த தண்ணீரை வைத்து குறுவை அறுவடையை விவசாயிகள் முடித்தனர்..

டிசம்பர்: இதன்பிறகு, டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் மற்றும் அறுவடை சமயத்தில் அடித்த பலமான காற்று போன்றவற்றினால் விளைச்சல் குறைவாகி, நெல் விலையும் அதிகமாகவே எகிற துவங்கியது.. சம்பா சாகுபடிக்கு மழை கைகொடுக்கும் என நம்பி விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டும்கூட, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் ஓரிரு நாட்கள் பெய்த மழைக்கே, வயலில் தண்ணீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
அந்தவகையில், கடந்த 3 மாதங்களாகவே, தமிழகத்தில், அரிசி விலை உயர்ந்து வருகிறது எனலாம். சென்னையில் மொத்த விலையில் கிலோ ரூ.60-க்கு விற்ற புழுங்கல் அரிசி, கிலோ ரூ.68 ஆகவும், ரூ.60-க்கு விற்ற வேகவைத்த அரிசி ரூ.70 ஆகவும் விற்பனையாகிறது.
திடீர் உயர்வு: பாஸ்மதி அரிசி கிலோ ரூ.120-க்கும், பழுப்பு அரிசி ரூ.39-க்கும் விற்கப்படுகின்றன.. ரூ.37-க்கு விற்ற இட்லி அரிசி ரூ.40 ஆகவும், பிராண்டட் அரிசி கிலோவுக்கு ரூ.10 வரையும் அதிகரித்துவிட்டது. அந்தவகையில் சென்னையை பொறுத்தவரை, சென்னையில் சில்லறை விற்பனையில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.17 வரை உயர்ந்துள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், சன்ன அரிசி விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. கர்நாடகா மற்றும் ஆந்திராவில் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், சன்ன அரிசி விலை உயர்ந்துள்ளது.. கடந்த 4 மாதங்களில் படிப்படியாக இட்லி அரிசி கிலோ ஒன்றுக்கு 10 ரூபாயும், சன்ன ரக சாப்பாட்டு அரிசி கிலோ ஒன்றுக்கு 12 ரூபாய் முதல் 14 ரூபாய் வரை உயர்ந்து காணப்படுகிறது.
ஈரோடு : ஈரோடு மாவட்டம் அந்தியூரில் கடந்த 4 மாதங்களில் 26 கிலோ கொண்ட ஒரு சிப்பம் அரிசி விலை 300ல் இருந்து 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது..
அதேபோல, மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூரில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டதால், அரிசியின் விலை கிலோவுக்கு 5 முதல் 10 ரூபாய் வரையிலும் 26 கிலோ அரிசி சிப்பம் ரூபாய் 300 வரையிலும் அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால், அடுத்த 3 மாதங்களுக்கு அரிசி விலை குறைய வாய்ப்பில்லை என்கிறார்கள் வியாபாரிகள். எனவே, இந்த திடீர் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என்று நடுத்தரவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருச்சி மொத்த மார்க்கெட்டில் 26 கிலோ எடை கொண்ட மணச்சநல்லூர் பொன்னி அரிசி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரூ. 1290க்கு விற்கப்பட்டது. இன்று அதன் விலைரூ. 1500 ஆக உயர்ந்துவிட்டது.. சில்லறை மார்க்கெட்டில் ஒரு கிலோ மணச்சநல்லூர் பொன்னி ரூ. 64 வரை விற்கப்படுகிறது. அட்சயா பொன்னியின் விலை ரூ.74 ஆகவும், இட்லி அரிசி உள்பட அனைத்து வகையான அரிசியின் விலையும் உயர்ந்துள்ளது
திருச்சி, கோவை: திருச்சி மணச்சநல்லூர் அரியமங்கலம், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. அதன் காரணமாக திருச்சியில் மணச்சநல்லலூர் பொன்னி ரூ. 1500 க்கு கிடைக்கிறது. இதுவே சென்னை மற்றும் கோவை போன்ற பெருநகரங்களில் ரூ.1600 முதல், ரூ.1700 வரை விற்கப்படுகிறது. இந்த விலை ஏற்றத்திற்கு டெல்டா உற்பத்திபாதிப்பு மட்டுமல்லாமல் கர்நாடகாவில் இருந்து வரும் நெல் வரத்து சரிந்ததும் காரணமாக உள்ளது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
