பல கோடி சொத்து, சம்பளம், சொகுசு பங்களாக்கள்.. த்ரிஷாவின் பிரம்மாண்ட உலகம்! சொத்து மதிப்பு என்ன?
சென்னை: தென்னிந்திய திரையுலகில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தனது அசைக்க முடியாத நட்சத்திர ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்து வருபவர் நடிகை த்ரிஷா. தமிழ், தெலுங்கு என இரண்டு பிரதான மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து எண்ணற்ற பிளாக்பாஸ்டர் வெற்றிகளைக் குவித்த இவர், இன்றுவரை தயாரிப்பாளர்களின் நம்பகமான நடிகையாக திகழ்கிறார்.
இருபது வருடங்களாக இந்த வெற்றிகரமான சினிமா பயணத்தில், தென்னிந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளில் ஒருவராக உருவெடுத்துள்ள த்ரிஷா, பிரம்மாண்ட சொத்துக்கள், சொகுசு கார்கள் மற்றும் ஆடம்பர வீடுகளையும் வசப்படுத்தியுள்ளார்.

சுமார் ரூ.85 கோடி சொத்து மதிப்பு
திரைப்படங்கள் மற்றும் பிரபல முன்னணி நிறுவனங்களின் விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் த்ரிஷாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு தற்போது சுமார் ரூ.85 கோடி வரை இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியான திரைப்பட வாய்ப்புகள், திரையுலகில் இருக்கும் உச்சகட்ட வரவேற்பு மற்றும் புத்திசாலித்தனமான முதலீடுகள் ஆகியவை இவரது சொத்து மதிப்பை ஆண்டுதோறும் கணிசமாக உயர்த்தி வருகின்றன.
தொடரும் வெற்றிப் பயணம்
தமிழ் திரையுலகில் 'சாமி', 'கில்லி', 'அபியும் நானும்', 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'மங்காத்தா', '96' மற்றும் மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான 'பொன்னியின் செல்வன்' என ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது தேர்ந்த நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். இதேபோல், தெலுங்கு சினிமாவிலும் 'வர்ஷம்', 'நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா', 'அத்தடு' போன்ற மெகா ஹிட் திரைப்படங்கள் மூலம் ஆந்திரா மற்றும் தெலங்கானா ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடம்பிடித்தார். அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் இயல்பாகப் பொருந்தி நடிக்கும் திறமை, தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகியாக இவரது அந்தஸ்தை இன்றும் கெட்டியாகப் பிடித்து வைத்துள்ளது.
படத்துக்குப் படம் எகிறும் சம்பளம்
'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்கள் மற்றும் விஜய்யுடன் இணைந்த 'லியோ' ஆகிய திரைப்படங்களின் இமாலய வெற்றிக்குப் பிறகு, த்ரிஷாவின் மார்க்கெட் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தனது நடிப்புக்கான சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளார். முன்னதாக ஒரு படத்திற்கு ரூ.5 முதல் ரூ.10 கோடி வரை பெற்று வந்த த்ரிஷா, தற்போது ஒரு படத்திற்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை ஊதியமாகப் பெறுகிறார் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திரைப்படங்களைத் தவிர்த்து, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான முன்னணி நகைக் கடைகள், ஆடை பிராண்டுகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் லைஃப்ஸ்டைல் தயாரிப்புகளின் விளம்பரத் தூதராகவும் செயல்பட்டு வருகிறார். விளம்பரங்கள் மூலமாக மட்டுமே இவருக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.9 கோடி வரை வருமானம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் ரூ.10 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா
சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில் த்ரிஷாவுக்குச் சொந்தமாக ஆடம்பரமான ஒரு குடியிருப்பு உள்ளது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.10 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீட்டின் உள் அலங்காரம் எர்த் டோன் வண்ணங்களால் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னையைத் தவிர்த்து, தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கும்போது தங்குவதற்காக ஹைதராபாத்திலும் த்ரிஷாவுக்குச் சொந்தமாக ஒரு சொகுசு வீடு உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு சுமார் ரூ.6 முதல் ரூ.6.5 கோடி வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இவற்றுடன், இங்கிலாந்தின் லண்டன் நகரிலும் த்ரிஷாவுக்கு ஒரு குடியிருப்பு சொத்து இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், லண்டன் வீட்டின் மதிப்பு மற்றும் மற்ற சொத்து தொடர்பான விரிவான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications
