அடிமடியில் கை வைத்த டிரம்ப்.. அமெரிக்க வரியால் ஆண்டிபட்டியில் பாதிப்பு! இவ்வளவு பிரச்சனை இருக்கா?
சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரியை விதித்துள்ளார். இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரலாம் என கூறப்படுகிறது. வரிவிதிப்பால் நேரடி பாதிப்பு இல்லை என்றாலும் டாலர் மதிப்பு உயர்வால் இந்தியா இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது விலை உயர்வு பாதிப்பு இருக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். மேலும் ஏற்றுமதியாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் இந்த வரிவிதிப்பால் பல்வேறு இன்னலுக்கு ஆளாவார்கள் என சொல்லப்படுகிறது.
அமெரிக்க அதிபர் சமீபத்தில் சில நாடுகளின் பொருட்களுக்கு 50% வரை இறக்குமதி வரி (Import Duty) விதிக்கும் முடிவை அறிவித்துள்ளார். இந்த வரி இந்தியாவின் முக்கிய ஏற்றுமதியை வெகுவாகப் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவுகள் நேரடியாக இந்திய நுகர்வோருக்கும், குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதாகவும்., இதனால் காய்கறி, மளிகைப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

டிரம்ப் இறக்குமதி வரி
இந்தியாவைப் பொறுத்தவரை தனது வெளிநாட்டு வருவாயில் ஒரு முக்கிய பங்கினை ஏற்றுமதி மூலமே பெறுகிறது. குறிப்பாக ஏற்றுமதியைப் பொறுத்தவரை அமெரிக்கா, இந்தியாவுக்கு மிகப் பெரிய வணிக சந்தை ஆக உள்ளது. தற்போது இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அங்கு 50% வரி விதிக்கப்படுவதால் இந்தியாவின் ஏற்றுமதி வருவாய் குறையக் கூடும். இதனால் இந்தியாவின் வருவாய் குறைவதால், வெளிநாட்டு செலாவணி கையிருப்பு (Forex Reserve) குறையும். இதனால் ரூபாய் மதிப்பு குறைய வாய்ப்பு உண்டு.
கச்சா எண்ணெய் இறக்குமதி
ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள், குறிப்பாக கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இந்தியா வளைகுடா நாடுகளில் இருந்து பெரும்பாலும் டாலர் மூலமே கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால், அதன் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையும் உயர்ந்து விடும்.
பெட்ரோல் டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும். இதனால், காய்கறிகள், மளிகைப் பொருட்கள், அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான மின்சார, எரிவாயு, போக்குவரத்து செலவுகள் உயர்ந்து, குடும்பச் செலவுத்திட்டம் பாதிக்கப்படும். போக்குவரத்து கட்டணங்கள் கூடும். தனியார் வாகனம் வைத்திருப்பவர்களும் தினசரி செலவில் கூடுதல் சுமையை அனுபவிப்பார்கள்.
நடுத்தர வர்க்கம் சுமை
மேலும், பணவீக்கம் அதிகரித்தால், வங்கி வட்டி விகிதங்கள் மாற்றமடைந்து கடன் தவணை செலுத்தும் மக்களுக்கும் சிரமம் ஏற்படலாம். மேலும், இந்தியாவின் நிட்வேர், ஆடை, இயந்திர உபகரணங்கள், கைத்தொழில் பொருட்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்றவை அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், 50% இறக்குமதி வரி காரணமாக, அமெரிக்க வாடிக்கையாளர்கள் இந்தியப் பொருட்களை வாங்க தவறக்கூடும்.
உள்ளூர் மக்கள்
இதனால், பாகிஸ்தான், வியட்நாம், வங்காளதேசம் குறைந்த வரி செலுத்தும் நாடுகள் இந்தியாவுக்கு பதிலாக அமெரிக்க இறக்குமதியாளர்களிடமிருந்து அதிக ஆர்டர்களை பெறலாம். இதனால் திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும், ஏற்றுமதி நிறுவனங்களின் உற்பத்தி குறையும். எனவே தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படும் அபாயமும் உண்டு. குறிப்பாக நிட் வேர், கைத் தொழில், சிறு தொழில்கள் பாதிக்கப்படும்.
50% வரி
அமெரிக்காவின் இந்த 50% வரி முடிவு, நேரடியாக பெட்ரோல்-டீசல் விலை உயர்வை உண்டாக்காது. ஆனால், ரூபாய் மதிப்பு குறைவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஏற்றுமதி வருவாய் சரிவு ஆகிய காரணங்களால், மறைமுகமாக எரிபொருள் விலை உயர வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கம் நடுத்தர வர்க்க மக்களுக்கும், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கும் மிகுந்த சுமையாக மாறக் கூடும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications