“ஊழல் வழக்கில் கைதாகிவிட்டு அனுதாபம் தேட முயற்சிப்பதா?” - மூலனூர் கார்த்திக்கிற்கு ஐகோர்ட் கேள்வி!
சென்னை: ஊழல் வழக்கில் கைதான நிலையில் அனுதாபம் தேட முயற்சிப்பதா? என்று டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைதான மூலனூர் கார்த்திக் ஜாமீன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்புடைய 41 இடங்களில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஜூலை மாதம் 29 ஆம் தேதி ஒரே நேரத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி எஸ். விசாகன், டாஸ்மாக் முன்னாள் மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் உதவியாளர் பாஸ்கர், ரத்தேஷ் ராஜ், மூலனூர் கார்த்திக் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூலனூர் கார்த்திக், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீனுக்கு அரசு தரப்பு கடுமையாக ஆட்சேபம் தெரிவித்ததால் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து மூலனூர் கார்த்திக் இரண்டாவது முறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, "டாஸ்மாக் வழக்கில் கைதாகி உள்ள கார்த்திகை காவலில் எடுத்து ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்திவிட்டது. வழக்கு தொடர்பான ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். ஒருவர் தலைமறைவாக உள்ளார் என்பதால் கார்த்திக்கிற்கு ஜாமீன் வழங்காமல் நீண்ட நாட்களுக்கு சிறையில் வைத்திருக்க வேண்டியதில்லை" என்று வாதிட்டார்.
காவல்துறை சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், "முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவரான கார்த்திக்கிற்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகள் வாக்குமூலம் அளிக்க தயங்குவார்கள். அதனால் ஜாமீன் வழங்கக் கூடாது" என்று வாதங்களை முன்வைத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி லட்சுமி நாராயணன், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார். மீண்டும் இன்று வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில், கார்த்திகை ஏற்கனவே நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
கார்த்திக் மீது குதிரை பேர வழக்கும் உள்ள நிலையில் விசாரணையில் அதனைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, எம்எல்ஏ-வை விலைக்கு வாங்க முயற்சித்த வழக்கில் மனுதாரர் சிறையில் இருந்து வருகிறார். ஊழல் வழக்கில் கைதான நிலையில் அனுதாபம் தேட முயற்சிப்பதா? என்று கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து காவல்துறை தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Click it and Unblock the Notifications
