ராஜ்ய சபா தேர்தலில் போட்டி இல்லை.. பாஜகவோடு மட்டுமே அமமுக கூட்டணி.. டிடிவி தினகரன் ட்விஸ்ட்!
தஞ்சாவூர்: சட்டசபை மற்றும் மாநிலங்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தாம் அதிமுக உடன் கூட்டணி அமைக்கவில்லை என்றும், பாஜகவோடு தான் கூட்டணி வைத்திருக்கிறேன் என்று கூறிய டிடிவி தினகரன், ஓபிஎஸ் பதவிக்கால எந்த எல்லைக்கும் செல்ல துணிந்துவிட்டார் என்றும் விமர்சித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. சட்டசபைக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் திமுக ஆட்சி சிறப்பாக இருந்ததாகவும், மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் வாழ்த்தினார். இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீண்ட நாட்களாக கூட்டணி தொடர்பாக அமைதி காத்து வந்த ஓபிஎஸ், திடீரென திமுக பக்கம் சாய்வது பேசுபொருளாகி இருக்கிறது. இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் திமுகவில் இணைவது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் ஓபிஎஸ் மக்கள் பணியாற்ற வேண்டும் என்றால், இன்னொரு கட்சிக்கு செல்லலாம்.
ஆனால் பதவிக்காக எதையும் செய்ய துணிந்துவிட்டார் ஓபிஎஸ்.. எம்ஜிஆர், ஜெயலலிதா புகழுக்கு கலங்கம் விளைவிப்பதை மன்னிக்க முடியாது. உப்பைத் தின்றவர் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு இதைவிட பெரிய தீங்கை ஓபிஎஸ் மற்றும் ஐயப்பன் இருவராலும் இழைக்க முடியாது. தர்மயுத்தத்தை தர்மர் தான் நடத்த வேண்டும். அதர்மவாதி நடத்தினால், அது அதர்மத்தில் தான் முடியும்.
ஓபிஎஸ் துரியோதனன் கூட்டத்தில் சென்று சேர்கிறார். அதேபோல் சட்டசபை மற்றும் ராஜ்ய சபா தேர்தலில் நான் போட்டியிடவில்லை. அதேபோல் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. நாங்கள் பாஜகவோடு மட்டும்தான் கூட்டணி அமைத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமி - டிடிவி தினகரன் இடையில் மீண்டும் மோதலா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் அதிமுக தலைமையிலான கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி கூறி வரும் சூழலில், டிடிவி தினகரன் தாங்கள் என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று பேசத் தொடங்கி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமமுக தொண்டர்கள் அதிமுக கூட்டணியை ஏற்கவில்லையா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications