எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க.. விஜய்யிடம் ஆதரவு கேட்க இருந்தோம்.. டிடிவி தினகரன் சொன்ன பாய்ண்ட்!
செங்கல்பட்டு: எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க, விஜய்யிடம் ஆதரவு கேட்க இருந்ததாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நாங்கள் திமுகவிடம் பேசியதாக கூறுவது தவறு என்று தெரிவித்த டிடிவி தினகரன், தவெக ஆட்சியை காப்பாற்ற விஜய் எடுத்த முயற்சிகள் வெளிப்பட்டுவிட்டதால் இப்படி பேசுவதாகவும் சாடியுள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்சத்தில் இருக்கிறது. தவெக வேட்பாளர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா இருவரும் திமுகவுடன் ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்க பார்த்தது என்பதை மட்டுமே மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர். அதேபோல் குதிரை பேரம் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவோ, மக்களிடம் இருக்கும் எதிர்ப்பு தொடர்பாகவோ தவெகவினர் வாய் திறக்கவில்லை.

மக்களிடம் அதிகரித்துள்ள எதிர்ப்பு காரணமாக முதல்வர் விஜய் முன்னிலையிலேயே தவெக வேட்பாளர் சத்தியபாமா அழுதார் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் முதல்வர் விஜய் தனது பிரச்சாரத்தில் திமுகவை மீண்டும் சாடி வருகிறார். அதேபோல் அதிமுக தலைமை எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் பேசி வருகிறார்.
தவெக ஆட்சி அமைத்த நாளில் இருந்தே இதே குற்றச்சாட்டை முன் வைத்து வருவதால், மக்களிடம் இது எடுபடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் பேசுகையில், அதிமுக தலைமையை கொச்சைப்படுத்தும் வகையில் விஜய் பேசுகிறார்.
திமுக உடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைக்க முயற்சித்ததாக சொல்கிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமே கிடையாது. இதுதொடர்பாக மே 8ஆம் தேதியே விளக்கம் கொடுத்தேன். நீங்கள் எப்படி எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க உங்கள் கட்சி எம்எல்ஏவிடம் கடிதம் வாங்கினீர்கள் என்று என்னிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பின.
அதற்கு விஜய்யால் ஆட்சி அமைக்க முடியாமல் போகும். திமுக ஆட்சியமைக்க கோரவில்லை என்று கூறிவிட்டார்கள். இதனை அப்போதே கூறிவிட்டேன். எடப்பாடி பழனிசாமியை முதல்வாக்க விஜய்யிடம் ஆதரவு கோர முடிவு செய்திருந்தோம். எங்கள் எம்எல்ஏ-க்கள் 25 பேரை நீங்கள் இழுத்தீர்களே.. அதனால் எங்களுக்கு ஆதரவு கேட்பதாக இருந்தோம். அந்த முயற்சியை செய்தோம்.
திமுகவுடன் பேசியதாக சொல்வதும் தவறு.. பாஜக பின்னணியில் இருந்ததாக சொல்வதும் தவறு.. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க முயற்சித்தோம். அதற்கு சிலர் ஒத்துக்கொள்ளவில்லை. அப்போது திருமாவளவனை முதல்வராக்க முயற்சித்தோம். இதில் பாஜகவுக்கு எந்த ரோலும் கிடையாது. தவெக ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள அதிமுக எம்எல்ஏ-க்களை ஏமாற்றி ராஜினாமா செய்ய வைத்தார்.
மதிமுக எம்எல்ஏ-க்களையும் அழைத்தார்.. ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் ஆட்சியை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் வெளிப்பட்டுவிட்டதால், அதனை மறைக்க திமுக - அதிமுக கூட்டணி என்று பேசுகிறார்கள். திருச்சியில் பேசும் போது இருவரும் ஒன்றாக வருவார்கள் என்றார். இப்போது விஜய் தான் களவாணி.. திமுக - அதிமுக ஒன்றாகவா நிற்கிறது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
