என்டிஏ கூட்டணியில் அமமுக.. அமித்ஷாவிடம் 10 தொகுதிகள் கேட்ட டிடிவி தினகரன்.. எடப்பாடி முடிவு என்ன?
சென்னை: என்டிஏ கூட்டணியில் இணைவது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசி இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் என்டிஏ கூட்டணியில் அமமுகவுக்கு 10 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கோரிக்கை வைத்திருப்பதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியை முழுமையாக கட்டமைக்க பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக கூட்டணியை பாமக இறுதி செய்துவிட்ட சூழலில், அடுத்ததாக மற்ற சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அதிமுக கூட்டணிக்குள் டிடிவி தினகரனை சேர்க்க எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் கொடுத்திருக்கிறார். டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துவிட்டு இதனை பொதுவெளியிலும் உறுதி செய்தார். ஆனால் பாஜக தரப்பில் என்டிஏ கூட்டணியில் சேர்க்கப்படும் அமமுக, ஏசி சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, பாரிவேந்தரின் ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுக்கும் சேர்த்து பாஜகவிடம் தொகுதிகளை கொடுக்க அறிவுறுத்தப்பட்டது.
இதனால் அமித்ஷா தரப்பில் மொத்தமாக 56 தொகுதிகள் மற்றும் 3 அமைச்சரவை கேட்கப்பட்டது. இதில் 3 அமைச்சர் பதவிகளை கொடுக்க மட்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சேபணை தெரிவித்ததாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்கு பின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்.
அவரும் அமித்ஷாவை சந்தித்துவிட்ட சூழலில், அமமுகவுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்பட்டிருக்கிறது. அப்போது அமமுகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று டிடிவி தினகரன் கோரிக்கை வைத்திருக்கிறார். கடந்த லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகளில் அமமுக போட்டியிட்டது. அதனால் இம்முறை குறைந்தது 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார்.
இதற்கு அமித்ஷா தரப்பிலும் எந்தவித ஆட்சேபணையும் சொல்லவில்லை என்று தெரிகிறது. இதனால் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் உள்ஒதுக்கீடாக அமமுகவுக்கு ஒதுக்கப்படுவதற்கும் எடப்பாடி பழனிசாமி எந்தவித ஆட்சேபணையும் கூறவில்லை. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி கடைசி வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications