தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ
ராணிப்பேட்டை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்பாளர் பட்டியல், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சோளிங்கர் தொகுதியில் தனக்கு சீட் ஒதுக்கப்படாததால் முன்னாள் எம்எல்ஏ பார்த்திபன் அமமுகவில் இருந்து விலகியுள்ளார். அவர் தினகரன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் நடந்த நிகழ்ச்சியில் சோளிங்கர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பார்த்திபன் பேசுகையில், "பாரதிய ஜனதா கட்சியில் நீங்கள் ஏன் சேர்ந்தீர்கள். உங்களுடைய பினாமியை, உங்களின் உதவியாளரை டெல்லியில் அழைத்து சென்று எப்படி சொன்னார்கள் என்பது உங்களின் மனசாட்சிக்கும், ஆண்டவனுக்கும் தெரியும். ஆனால் எங்களின் விருப்பத்தில் தான் பாஜகவுடன் கூட்டணி வைத்ததாக வாய் கூசாமல் தினகரன் பொய் பேசுகிறார்.

அமித்ஷாவிடம் பேசியது என்ன
ஏன் இன்று புதிதாக அரசியலுக்கு வந்த தவெகவுடன் நீங்கள் பேசவில்லையா. அமமுகவில் இருந்து அவர்களிடம் பேசியது யார், அங்கிருந்து உங்களுடன் யார் பேசினார்கள் என்று எனக்கு தெரியாது. அதைப்பற்றியெல்லாம் நீங்கள் நிர்வாகிகளிடம் தெரிவித்தீர்களா. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார் என்றால் அப்போது அதிமுக நிர்வாகிகளும் அவருடன் நிற்கிறார்கள்.
நீங்களும் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தீர்கள். இதுவரை எத்தனையோ முறை அமித்ஷாவை சந்தித்துவிட்டீர்கள். உங்களுடன் அமமுக நிர்வாகிகள் எத்தனை பேர் உடனிருந்தனர். எத்தனை பேரை நீங்கள் அமித்ஷாவிடம் அறிமுகம் செய்துள்ளீர்கள். கூட்டணி தொடர்பாக அவரிடம் என்ன பேசினீர்கள் என்பது கூட தெரியாது. இந்த தொகுதியில் சீட் வேண்டும் என்று கொடுத்தது உண்மை.
தொகுதியை கேட்டு பெற்றீர்களா
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் வரதராஜன் ஒரு முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர். அவர் மகன் தற்போது ஒன்றிய குழு உறுப்பினராக உள்ளார். உங்களை நம்பித்தான் அவர் இருக்கிறார். அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து வாய்ப்பளித்தீர்களா. முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் ஆம்பூர் தொகுதியை கொடுத்தார். அதையாவது கேட்டு பெற்றீர்களா.
ஏதோ சீட் எல்லை என்பதற்காகவோ, திமுகவில் இணைகிறேன் என்பதற்காகவோ இதை சொல்லவில்லை. எத்தனையோ முறை மாற்று கட்சியில் இருந்து வாய்ப்பு வந்தபோது கூட செல்லவில்லை. ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இவர்களிடம் பேசி எனர்ஜியை வீணடிக்க வேண்டாம். உங்களிடம் அதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். சொல்லிவிட்டேன்" என்றார்.












Click it and Unblock the Notifications