சென்னை ஏர்போர்ட்டை தனியாருக்கு மாற்றுவதா? பரந்தூருக்காக விஜய் பதறுனது..! டிடிவி தினகரன் கண்டனம்
சென்னை: சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியாருக்கு மாற்றக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியதை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (Airport Authority of India) கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வேறொரு நிறுவனத்திடமோ அல்லது தனியாரிடமோ மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த அரசுகள், அந்தந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசைக் கோருவது கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள், உட்கட்டமைப்பு மற்றும் பயணிகள் வசதிகளில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில், அதனை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல.
பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, தரமான மற்றும் குறைந்த செலவில் சேவைகளை வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கும் பட்சத்தில், லாபமே முதன்மை நோக்கமாக மாறும் என்பதோடு, பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தக் கூடும் என்ற விமர்சனமும் பரவலாக எழத் தொடங்கியுள்ளது.
எனவே, சென்னை விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கோரி பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளில் உண்மை இருக்கும் பட்சத்தில், அத்தகைய முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு இவர் தெரிவித்துள்ளார்.
அது போல் முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதன் உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வருகிறது!
தமிழக மக்களுக்குத் தெரியாமல் சென்னை விமான நிலைய நிர்வாகத்தைத் தனியாரிடம் தாரைவார்க்க பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளதாம் TVK அரசு!
இரட்டை ஓடுபாதைகள், சரக்கு முனையம், MRO வசதிகள், எதிர்கால விரிவாக்கத்திற்கான நிலப்பரப்புடன் நமது தமிழக அரசுக்கு சொந்தமான TIDCO நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உருவாக இருந்த பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்தது, மீனம்பாக்கம் சென்னை விமான நிலையத்தைக் கைப்பற்றப் போகும் தனியார் நிறுவனத்தின் வருங்கால வருமானத்தையும் ஏகபோக லாபத்தையும் பாதுகாக்கவா?
அந்தக் கடிதத்தை மூடி மறைத்தது ஏன்?
#ParandurAirport #ChennaiAirport இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
