ஜல்லிக்கட்டு போட்டிகளால் இளைஞர்கள் சமுதாயம் சீரழிகிறதா? தவெக எம்எல்ஏவுக்கு தினகரன் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளால் இளைஞர்கள் சமுதாயம் சீரழிகின்றன என சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையாவின் கருத்துக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழர்களின் பாரம்பரியத்தோடும், பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன என்ற சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

ttv dinakaran solavandhan

சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக் கொள்ள மக்கள் வரிப் பணத்திலிருந்தே கார் வழங்கலாம் என்று முடிவெடுத்த தவெக, அதனை தனது இரு சட்டமன்ற உறுப்பினர்களை வைத்தே எப்படி அவையில் முன் மொழிந்ததோ அதே போல ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூரை உள்ளடக்கிய சோழவந்தான் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை வைத்தே இத்தகைய இழிவான பேச்சைச் சட்டமன்றத்தில் பதிவு செய்திருப்பதன் மூலம், வருங்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்திருக்கிறது.

அலங்காநல்லூரில் தொடங்கி சென்னை மெரினா வரை, தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் வெகுண்டெழுந்து, ஒன்றுதிரண்டு நடத்திய போராட்டத்தின் விளைவாகப் பெற்ற நமது பாரம்பரிய உரிமையை கொச்சைப்படுத்தும் வகையிலான தவெக சட்டசபை உறுப்பினரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படாமல் இருப்பதன் மூலம், இது முன்கூட்டியே திட்டமிட்ட செயலா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

தமிழர்களின் வீரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாகவும், விவசாய வாழ்வியலின் அங்கமாகவும் திகழும் ஜல்லிக்கட்டு குறித்த சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் இழிவான பேச்சுதான் தவெகவின் நிலைப்பாடா? என்பதை அக்கட்சித் தலைமை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

எனவே, வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளையும், அதற்காகப் போராடிய மக்களின் உணர்வையும், பங்களிப்பையும் கொச்சைப்படுத்தும் வகையிலான தவெக சட்டமன்ற உறுப்பினரின் பேச்சை சட்டப் பேரவைத் தலைவர் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதோடு, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, அப்பேச்சைத் திரும்பப் பெற வேண்டும் என தவெகவின் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அது போல் சீமானும், கருப்பையாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழர்களின் வீரக்கலையான ஏறுதழுவுதலை (ஜல்லிக்கட்டு) 'இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு' என இழிவுபடுத்துவதா?
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா கருத்தைத் திரும்பப்பெற்று மன்னிப்புக் கோர வேண்டும்!

தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும், நாட்டு மாடுகளைக் காக்கும் மரபின் நீட்சியாகவும் திகழும் ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு, இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு என்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்; அதற்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை முற்றிலும் நியாயமானது. உழவர்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சியும் முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால், சர்க்கரை ஆலைக்கு நிதி கேட்டுப் பெறுவதற்காக ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தி பேச வேண்டிய தேவை என்ன?

தமிழ்நாட்டு தெருக்கு தெரு இருக்கும் சாராயக்கடைக்கு சென்று மது அருந்தும் இளைஞர்கள் சீரழியவில்லையா? அலங்காநல்லூர் வாடிவாசலில் காளையைத் தழுவி வீரத்தைக் காட்டும் இளைஞர்கள்தான் சீரழிகிறார்களா?

வாடிவாசலில் நின்று காளையை எதிர்கொள்வது பண்பாட்டு சீரழிவு? ஆனால், அரசு விற்கும் மது குடித்து உடலையும், குடும்பத்தையும், பொருளாதாரத்தையும் இழப்பது இளைஞர்களின் முன்னேற்றமா?

இளைஞர்களை மதுவை நோக்கி அழைத்துச் செல்லும் சாராயக்கடைகளை மூடச் சொல்ல உங்களுக்குத் துணிவு இருக்கிறதா? இளைஞர்களை மண்ணோடும், மாடுகளோடும், உழவோடும் இணைக்கும் ஏறுதழுவுதலை மட்டும், சீரழிவு என்று சொல்லும் துணிவு எங்கிருந்து உங்களுக்கு வந்தது?

குடிக்கிற இளைஞன் சீரழியவில்லை; காளையை வளர்க்கிற இளைஞன் சீரழிகிறானா? மதுப்புட்டியைத் தூக்குகிற கை நல்ல கை; காளையின் திமிலைத் தழுவுகிற கை கெட்ட கையா?
சாராயக்கடைக்கு அரசு இடம் கொடுத்தால் அது வருவாய்;
ஜல்லிக்கட்டுக்கு அரசு இடம் கொடுத்தால் அது வீண் செலவா? எப்படிபட்ட மோசமான பார்வை இது?

ஜல்லிக்கட்டு என்பது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது தமிழர்களின் வேளாண்மையோடும், கால்நடை வளர்ப்போடும், நாட்டு மாட்டு இனங்களின் பாதுகாப்போடும், கிராமியப் பொருளாதாரத்தோடும் பின்னிப் பிணைந்த வாழ்வியல் பண்பாடு. ஒரு காளையை ஜல்லிக்கட்டுக்குத் தயார்படுத்துவதற்காக ஓர் உழவர் குடும்பம் ஆண்டுக்கணக்கில் அதனைத் தனது குடும்ப உறுப்பினரைப் போல வளர்க்கிறது.

அதன் உணவு, உடல்நலம், பராமரிப்பு என அத்தனையிலும் அக்கறை செலுத்துகிறது. "ஓஓ! இவள் இ 'பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால், திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும் சொல்லால் தரப்பட்டவள்..."- ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்று குறிப்பிடுகிறது கலிப்பாடல்,

இதை எல்லாம் அறியாமல், அந்த வாழ்வியலைப் புரிந்துகொள்ளாமல், அந்த மண்ணின் வரலாற்றை உணராமல்,
"இளைஞர்களைச் சீரழிக்கும் ஜல்லிக்கட்டு" என்று பேசுவது அறியாமையின் உச்சமல்லவா? அதுவும் உலகமே அறிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தனது தொகுதிக்குள் கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினரிடமிருந்தே இப்படியொரு கருத்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.

ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை மறந்துவிடக்கூடாது மெரினா கடற்கரையிலும் தமிழ்நாட்டின் வீதிகளிலும் உலக நாடுகளின் தெருக்களிலும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டது எதற்காக?
"எங்கள் மாடு! எங்கள் மண்! எங்கள் உரிமை! எங்கள் ஜல்லிக்கட்டு!" என்று தங்களது இனத்தின் அடையாளத்தைக் காக்கத்தானே போராடினார்கள்? அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இளைஞர் எழுச்சியையும் "சீரழிவு" என்று சொல்வீர்களா?

ஒரு மக்கள் நலத்திட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட நிதியை மற்றொரு திட்டதிற்கு பயன்படுத்துவதை எதிரியாக நிறுத்துவது சரியான அரசியல் அல்ல. பள்ளிக்கூடத்திற்கு நிதி கொடுத்ததால் மருத்துவமனை வேண்டாமா?
மருத்துவமனை கட்டியதால் சாலை போடக்கூடாதா? என்ன மாதிரியான கருத்துருவாக்கம் இது?

தமிழர்களின் அடையாளத்தை அழித்துவிட்டு தமிழ்நாட்டை வளர்க்க முடியாது. தமிழர்களின் பண்பாட்டை இழிவுபடுத்திவிட்டு தமிழர்களுக்கு நல்லாட்சி தர முடியாது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் விளையாட்டு மட்டுமல்ல;

அது எமது மண்ணின் அடையாளம்! அது வெறும் காளையும் மனிதனும் மோதும் களம் அல்ல; மனிதனுக்கும் மாட்டிற்குமான ஆயிரமாண்டுப் பந்தத்தின் பண்பாட்டு வெளிப்பாடு! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+