தவெகவுக்கு 2 கோடி ஓட்டுகள்.. திமுகவை தாண்டிவிட்டோம்.. புது புது டேட்டாவுடன் வரும் ஆதவ் அர்ஜுனா!
சென்னை: தமிழ்நாட்டில் தவெகவுக்கு 2 கோடிக்கும் அதிகமான வாக்குகள் இருப்பதாக அக்கட்சியின் ஆதவ் அர்ஜுனா பேசி இருப்பது கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியாக இணைந்து போட்டியிட்டே 2.09 கோடி வாக்குகளை தான் பெற்றது. ஆனால் தவெகவுடன் எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்காத சூழலில், 2 கோடி வாக்குகள் இருப்பதாக கூறுவது கேலிக்குள்ளாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் மொத்தமாக 5.43 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். SIR பணிகளுக்கு பின் சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக SIR பணிகளின் போது திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக இயங்கினர். ஆனால் விஜய் SIR பணிகள் தொடங்கப்பட்டு 10 நாட்களுக்கு பின்னரே வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதனால் களத்தில் தவெகவின் கட்டமைப்பு வலுவாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் தவெக செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசுகையில், SIR பணிகளுக்காக ஒவ்வொரு வீடாக செல்லும் போது சில விஷயங்களை கவனித்தேன். ஒரு பூத்தில் ஆயிரம் முதல் 1,200 ஓட்டுகள் இருக்கும்.
அப்போது வாக்கு கேட்கும் போது இது திமுக வீடு, இது அதிமுக வீடு, இது விசிக வீடு, இது கம்யூனிஸ்டுகள் வீடு என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் தவெகவுக்கு ஒரு வீடு என்று இல்லை.. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்குள்ளும் தவெகவின் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். ஒரு குடும்பத்திற்கு ஒரு வாக்கு என்று வைத்துக் கொள்ளுங்கள்.
மொத்தமாக 2.25 கோடி ரேஷன் கார்டுகள் இருக்கிறது. கடந்த தேர்தலில் திமுக வாங்கிய வாக்குகள் 2.09 கோடி வாக்குகள்.. அவ்வளவுதான்.. இப்போதே திமுகவை தாண்டிவிட்டோம்.. ஒற்றுமையாக இருந்து களம் காண்போம் என்று தெரிவித்துள்ளார். தவெக இன்னும் தேர்தலையே சந்திக்காத சூழலில், தங்களுக்குள் 2 கோடிக்கும் அதிக வாக்குகள் இருப்பதாக ஆதவ் அர்ஜுனா பேசி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஒவ்வொரு கூட்டத்தில் புது புது டேட்டாவுடன் வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். முதலில் தங்களுக்கு 23 சதவிகித வாக்குகள் இருப்பதாக கூறி இருந்தார். கரூர் கூட்டத்திற்கு பின் விஜய்யின் செல்வாக்கு குறைந்தது. ஆனால் சிறப்பு பொதுக்குழுவில் 26 சதவிகித வாக்குகள் இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து 34 சதவிகித வாக்குகள் இருப்பதாக செங்கோட்டையன் பேசி வந்தார். தற்போது ஆதவ் அர்ஜுனா தவெகவுக்கு 2 கோடி வாக்குகள் இருப்பதாக பேசி இருக்கிறார். 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக மட்டும் பெற்ற வாக்குகள் 1.74 கோடியாகும். அதிமுக பெற்ற வாக்குகள் 1.53 கோடியாகும். தமிழ்நாட்டில் பெரிய கட்சிகளே தனித்து 2 கோடி வாக்குகளை பெற்றது கிடையாது.
ஆனால் இதுவரை தவெகவுடன் எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வராத சூழலில், ஆதவ் அர்ஜுனா என்ன டேட்டாவுடன் இப்படியான கணக்குகளை வெளியிடுகிறார் என்பது தவெகவினர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் 2 கோடி வாக்குகள் தவெகவுக்கு இருக்கிறது என்ற ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு பலராலும் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications