செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஒபிஎஸ்.. விஜய் தலைமையில் அமையும் கூட்டணி? தவெகவுக்கு ஜாக்பாட்!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைய இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல், பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ஓபிஎஸ் தனிக் கட்சி குறித்து சூசகமாக கூறியுள்ள நிலையில், டிடிவி தினகரனும் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகிறார். இதனால் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் விஜய் பக்கம் சாய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
3 நாட்களுக்கு முன்பாக கரூரில் அண்ணாமலை மற்றும் டிடிவி தினகரன் சந்தித்து சில நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். தேவர் ஜெயந்தி விழாவின் போது ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் அண்ணாமலை ஆகிய மூவரும் இணைந்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதன்பின் மூவரும் இணைந்து செயல்பட உள்ளதாகவும் அறிவித்தனர்.

இதனிடையே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொடர்ச்சியாக விஜய் தலைமையில் ஒரு கூட்டணி உருவாகும் என்று கூறி வந்தார். ஆனால் செங்கோட்டையன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் அமைதி காத்து வந்தனர். இதனிடையே டிசம்பர் 15ஆம் தேதி புதியக் கட்சிக்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஓபிஎஸ் சூசகமாக அறிவித்துள்ளார்.
இதற்கு மேல் தனி குழுவாக செயல்பட்டால், அது பலனளிக்காது என்பதை கருதியே ஓபிஎஸ் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது. இப்படியான சூழலில் இன்னும் 2 நாட்களில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஏராளமான முன்னாள் எம்பி, எம்எல்ஏ-க்கள் உடனும் செங்கோட்டையன் பேசி வருகிறார்.
இதனால் நவம்பர் 27ஆம் தேதி செங்கோட்டையன் எடுக்கப் போகும் முடிவு தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேபோல் தவெகவில் இணையப் போகிறேன் என்ற முடிவை செங்கோட்டையன் தனியாக எடுத்திருக்க வாய்ப்புகள் குறைவு என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக தவெகவுடன் அமமுக மற்றும் ஓபிஎஸ் தரப்பில் கூட்டணியில் இணையலாம் என்று கருதப்படுகிறது. இது நடந்தால், 2016ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணி உருவாகியதை போல், விஜய் தலைமையில் மீண்டும் மநகூ உருவாகும் என்று பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக தென் மாவட்டங்களிலும் விஜய்யின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications