இருமொழிக் கொள்கை தான்.. இந்திக்கு “நஹி”.. தமிழே ஆட்சிமொழி! விஜய்யின் தவெக மாநாட்டில் உறுதி!
சென்னை: இருமொழிக் கொள்கையை தமிழக வெற்றி கழகம் பின்பற்றும் என கட்சியின் முதல் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்மொழியான தமிழ், உலகிற்குத் தேவையான மொழியான ஆங்கிலம் ஆகிய இருமொழிகள் தான் என அழுத்தமாகச் சொல்லி இருக்கிறது தவெக. ஆக, இந்தி மொழிக்கு விஜய் "நஹி" சொல்லி இருக்கிறார்.
தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டுக்கு எப்போதும் ஏற்ற கொள்கை. தாய்மொழியான தமிழ், உலகிற்குத் தேவையான மொழியான ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை தமிழக வெற்றிக் கழகம் பின்பற்றுவதாக இன்று நடைபெற்று வரும் தவெக மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழி, தமிழே வழிபாட்டு மொழி என்பது உறுதி செய்யப்படும். தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மொழியிலேயே ஆராய்ச்சிப் படிப்பு வரை கற்கலாம் என்பதும், தமிழ் வழிக்கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும் உறுதி செய்யப்படும். என தவெக மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வர மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. எனினும், தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என திமுக அரசு அழுத்தமாகக் கூறி வருகிறது. தேசியக் கல்விக் கொள்கை உருவாக்குப்படுவதற்கு முன்பே ஒரு முன்னோடி மாநிலமாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது என திமுக அரசு கூறி வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தபோதும், தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் என்றும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் அறிவித்துள்ள மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
1965ஆம் ஆண்டில் இந்தியை அலுவல் மொழியாக மாற்ற அப்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது. அதனை எதிர்த்து மாணவர்களும் மக்களும் தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 1968 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் அண்ணா, தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது" என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்தி மொழி பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது. இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்துவதுதான் எம்.ஜி.ஆரின் கொள்கையாகவும் இருந்தது. கருணாநிதியும் சரி, ஜெயலலிதாவும் சரி, இருமொழிக்கொள்கையே ஏற்புடையது என்றனர். இப்போது, மும்மொழிக் கொள்கையை நிறைவேற்றிட பாஜக தீவிரம் காட்டி வரும் நிலையில், தவெகவும் இருமொழிக் கொள்கையே உறுதியாகத் தொடரும் என தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications