தவெக அடிச்சு மேலே வருதே.. இந்தியா டுடே - சி வோட்டர் கணிப்பில் நடந்த ட்விஸ்ட்.. கிங் மேக்கர் விஜய்!
சென்னை: தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் வேளையில், திமுக-அதிமுக இடையிலான இருமுனைப் போட்டி இந்த முறை மும்முனை போட்டியாக மாறலாம் என்று கூறப்படுகிறது. விஜயின் தவெக கட்சி
இந்த முறை பெரிய அளவில் வாக்குகளை பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக பல இடங்களில் தேர்தல் முடிவுகளை
தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம் என்று கூறப்படுகிறது.
நேற்று வெளியான இந்தியா டுடே - சி-வோட்டர் (C-Voter) Mood of the Nation ஆய்வு முடிவுகள், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) கட்சிக்கு நல்ல வாக்கு வங்கி உள்ளதாக மறைமுகமாக தெரிவிக்கின்றன.

தவெக வெறும் ஒரு புதிய கட்சி மட்டுமல்ல, அது ஒரு வலுவான அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதை உணர்த்துகின்றன.
வாக்கு வங்கியில் அடித்து தூக்கும் தவெக 'விசில்'
இந்த ஆய்வின்படி, தமிழகத்தில் தற்போதைய நிலையில் மக்களவைத் தேர்தல் நடந்தால், இந்தியா கூட்டணி (INDIA bloc) 38 இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கவனிக்கத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால்,
'மற்றவர்கள்' பிரிவின் வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
தற்போதைய சர்வேயின்படி, திமுகவின் இந்தியா கூட்டணி 45 சதவிகிதத்தையும், பாஜக என்டிஏ கூட்டணி 33% வாக்குகளையும் பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. தவெக 15% முதல் 22% வரையிலான வாக்கு சதவீதத்தை எட்டக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த எண்கள் அதிகாரப்பூர்வமானவை அல்ல என்றாலும், கள நிலவரம் மற்றும் விஜய்யின் பொதுக்கூட்டங்களுக்குத் திரளும் தன்னார்வக் கூட்டம் இந்த ஊகங்களுக்கு வலு சேர்க்கின்றன. குறிப்பாக, முதல்முறை வாக்காளர்கள் மற்றும் பாரம்பரிய கட்சிகளின் மீது அதிருப்தியில் உள்ள இளைஞர்களின் வாக்குகளை விஜய் ஈர்த்து வருவதாகத் தெரிகிறது.
மாற்று அரசியல் முழக்கம்
விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக வகுத்துள்ளார். பாஜகவை தனது கொள்கை எதிரி என்றும், திமுகவை தனது அரசியல் எதிரி என்றும் அறிவித்ததன் மூலம், அவர் ஒரு திராவிட-தேசிய நீரோட்டத்திற்கு மாற்றான ஒரு பாதையைத்
தேர்ந்தெடுத்துள்ளார். சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்த கூட்டத்தில் தனது கட்சிக்கு 'விசில்' சின்னத்தை அறிமுகப்படுத்திய விஜய், 2026 தேர்தலை ஒரு "ஜனநாயகப் போர்" என்று வர்ணித்துள்ளார்.
ஊழலற்ற நிர்வாகம் மற்றும் "ஒரே கட்சி ஆட்சி" என்ற முழக்கத்துடன் அவர் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களையும் ஒரே நேரத்தில் சிந்திக்க வைத்துள்ளது.
சவால்களும் எதிர்பார்ப்புகளும்
ஒரு திரை நட்சத்திரமாகப் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தாலும், அந்த ரசிகர் மன்ற வாக்குகளை அப்படியே தேர்தல் வாக்குகளாக மாற்றுவது விஜய்க்குப் பெரிய சவாலாக இருக்கும். வாக்குச்சாவடி அளவிலான கட்டமைப்பை பலப்படுத்துவதும், அடிமட்டத் தொண்டர்களை ஒருங்கிணைப்பதும் தவெக-வின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகளாக அமையும்.
எது எப்படியாயினும், 2026 தேர்தல் களம் ஒரு இருமுனை போட்டியாக இருக்காது என்பது மட்டும் உறுதி. விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. அவர் ஒரு 'கிங்' ஆக உருவெடுப்பாரா அல்லது 'கிங் மேக்கராக' மாறுவாரா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications