புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா கட்டுப்பாட்டில் தவெக.. கட்சியை கண்டுகொள்ளாத விஜய்.. பனையூர் பஞ்சாயத்து!
சென்னை: மே 10ஆம் தேதி தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின், கட்சியை கண்டுகொள்வதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. தவெகவை முழுக்க முழுக்க அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா தரப்பு கையாண்டு வருவதாகவும் அக்கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.
தமிழ்நாட்டில் தவெக கட்சி கட்டமைப்பு பெரிதாக இல்லாமலேயே ஆட்சியை பிடித்துவிட்டது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் தவெக மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டுமென்றால், கட்சி கட்டமைப்பு மிகவும் அவசியம். இதனை தவெகவும் உணர்ந்தே இருக்கிறது. இதன் காரணமாகவே அதிமுகவில் இருக்கும் 90% தவெகவுக்கு வர வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ச்சியாக பேசி வருகிறார்.

ஆனால் தவெக ஆட்சி அமைத்த பின் மொத்த கட்சியும் 3 அணிகளாக பிரிந்து கிடக்கின்றன. விஜய் மக்கள் இயக்கம் ஒரு அணியாகவும், தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன் கட்சியில் இணைந்தவர்கள், அதிமுகவில் இருந்து வந்தவர்கள் என்று 3 அணிகள் இருக்கின்றன. இவர்களுக்குள் எழும் பிரச்சனைகளை சரி செய்ய முடியாமல் தவெக தலைமை திண்டாடி வருகிறது.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பகலில் இல்லாமல் நள்ளிரவில் இவர்களின் பிரச்சனையை சரிகட்ட முயற்சிக்கிறார். ஆனால் யாரும் கோவித்து கொள்ளக் கூடாது என்று அத்தனை பிரச்சனைகளுக்கும் முடிவு சொல்லாமல், சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார். மறுபுறம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் இடையில் மோதல் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
இது வெளிப்படையாக இன்னும் வெளி வரவில்லை என்றாலும், உள்ளாட்சித் தேர்தல் வரும் போது மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக மேயராக யாரை நியமிக்கலாம் என்பதில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் மோதிக் கொள்வார்கள் என்று அக்கட்சியினர் புலம்ப தொடங்கி உள்ளனர்.
மறுபக்கம் கூட்டணி கட்சிக்கு சீட் ஒதுக்குவதில் மிகப்பெரிய சிக்கலை தவெக சந்திக்கும் என்று பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரச்சனைகள் உச்சத்தில் இருக்கும் சூழலில், முதல்வர் விஜய்யோ பனையூர் அலுவலகம் பக்கம் வருவதே அபூர்வமாக இருந்து வருகிறது. தவெக வெற்றிக்கு பின் பனையூர் அலுவலகத்திற்கு விஜய் வந்ததை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
உள்ளாட்சித் தேர்தல் வருவதற்கு முன் மாவட்ட வாரியாக இருக்கும் உட்கட்சி பிரச்சனையை சரி செய்யாமல், வலுவான கட்டமைப்பு கொண்ட திமுக மற்றும் அதிமுகவை வீழ்த்துவது மிகவும் சிரமம். போஸ்டர், பேனர் பிரச்சனை தொடங்கி டெண்டர் பிரச்சனை வரை கட்சி நிர்வாகிகள் மோதலை தொடர்ந்து வருகின்றனர். ஆனால் கட்சித் தலைமையோ எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறது.




Click it and Unblock the Notifications
