“இவரை யாராவது கன்ட்ரோல் பண்ணுங்க”.. தவெக எம்.எல்.ஏ சரவணனுக்கு எதிராக சொந்தக் கட்சியினரே கொந்தளிப்பு!
சென்னை: தவெக எம்.எல்.ஏவுக்கு எதிராக சொந்தக் கட்சியினரே வெகுண்டு எழுந்துள்ளனர். சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ ஈசிஆர் சரவணனின் போஸ்டர் அட்டகாசம் எல்லை மீறிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், தவெக தொண்டர்களே அவரைக் கண்டித்து சமூக வலைதளங்களில் பொங்கி வருகின்றனர்.
சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ ஈ.சி.ஆர் சரவணன் தொகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியும், பேனர்கள் வைத்தும் மக்களுக்கு இடையூறு கொடுப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் பலரும் எழுதி வருகின்றனர்.

ஈசிஆர் சரவணன்
ஈ.சி.ஆர்.சரவணன் ரசிகர் மன்றத்திலிருந்தே விஜய்யுடன் பயணிப்பவர். அப்போதிருந்தே போஸ்டர்கள் ஒட்டுவதற்கு பெயர் போனவர். ஈசிஆர் சாலை உள்ளிட்ட அப்பகுதி முழுக்க, சுவர் விளம்பரங்கள், பேனர்கள் என விளம்பரங்களால் திரும்பிப் பார்க்க வைத்தவர். தற்போது தவெக சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பில் உள்ளார்.
சோழிங்கநல்லூர் தொகுதிதான் தமிழகத்திலேயே பெரிய தொகுதி. அந்தத் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார் ஈசிஆர் சரவணன். ஆனால், தலைமை இவரைக் கண்டுகொள்ளவே இல்லை. இதுதொடர்பாக புஸ்ஸி ஆனந்திடமும் அவர் ஆதங்கத்தைக் கொட்டியதாக கூறப்படுகிறது.
அமைச்சரவையில்
இன்னும் சில மாதங்களில் அமைச்சரவை மாற்றம் ஏற்படலாம் எனும் தகவல் கோட்டை வட்டாரத்தில் உலவி வருகிறது. இதை அறிந்து கொண்ட ஈசிஆர் சரவணன், அந்த மாற்றத்தின்போது, அமைச்சரவையில் இடம்பெற்றுவிடும் திட்டத்தோடு காய் நகர்த்தி வருகிறார்.
அந்தவகையில் தான் பனையூர் மற்றும் நீலாங்கரையிலிருந்து திருவான்மியூர் வரை முதல்வர் விஜய்யின் கண்ணில் படும்படியாக அவரை வாழ்த்தி போஸ்டர்களையும் பேனர்களையும் வைத்துள்ளார். கவனத்தை ஈர்க்க சரவணன் ஒட்டி வரும் போஸ்டரே இப்போது அவருக்கு சிக்கலாக மாறியுள்ளது.

சொந்தக் கட்சியினரே கொந்தளிப்பு
சொந்தக் கட்சியினரே, 'ரோஸ்ட்' செய்யும் அளவுக்கு அவரது போஸ்டர் அட்டகாசம் எல்லை மீறிச் சென்றுள்ளது. "மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் போஸ்டர், பேனர் அடிக்கக்கூடாது' எனத் தலைமை உத்தரவிட்ட பிறகும் இப்படிச் செயல்பட்டு வருகிறார்" என தவெகவினரே கொந்தளித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக, சமூக வலைதளங்களில், ஈசிஆர் சரவணனை கடுமையாக விமர்சித்து தவெகவினர் பதிவிட்டு வருகின்றனர். அதற்குக் காரணம், பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலக கேட்டிலும் சரவணன் தனது போஸ்டர் பராக்கிரமத்தைக் காட்டி வருவதுதான்.
தவெக அலுவலக கேட் முழுக்க
பனையூர் தவெக அலுவலக கேட் முழுக்க, ஈசிஆர் சரவணன் படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கேட்டில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை கிழித்தாலும், மீண்டும் அங்கு போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. நாள்தோறும், சினிமா போஸ்டர்கள் ஒட்டுவது போல, கட்சி அலுவலக கதவையே போஸ்டராக்கி வைத்திருக்கிறார் ஈசிஆர் சரவணன்.

இதன் காரணமாகத்தான் தவெக தொண்டர்கள் கடுப்பாகிவிட்டனர். ஈசிஆர் சரவணனை எக்ஸ் தளத்தில் மென்ஷன் செய்தே பலரும், கண்டித்துள்ளனர். "எதுக்கு இந்த வேலைய பார்த்துக்கிட்டு இருக்கீங்க.." எனத் தொடங்கி, ஆபாச வார்த்தைகள் வரை பேசி ஈசிஆர் சரவணன் மீது கோபத்தைக் கொட்டியுள்ளனர்.
இன்னும் ரசிகர் மன்ற நிர்வாகி மாதிரியே
"போஸ்டர் ஒட்டாதீங்கனு புஸ்ஸி ஆனந்த் பல தடவை சொல்லிட்டாரு.. ஈசிஆர் சரவணன் பொதுச் செயலாளர் பேச்ச கேக்கனுமா இல்ல.. அதுவும் வேணாமா?? சொல்லியும் திருந்தாம பல தடவ செஞ்சா அவங்க பேரு habitual offender" என தவெக தொண்டர் ஒருவர் கண்டித்துள்ளார்.
இப்படியெல்லாம் கண்டுக்காம விட்டால் , நாளைக்கு தலைமை செயலகத்தில் கூட போஸ்டர் ஒட்டுவார் ஈசிஆர் சரவணன். ECR சரவணன்லாம் MLA பதவிக்கு துளியும் லாயக்கு இல்லை, மாற்று அரசியல் என்ன வென்று தெரியாமல், வெறும் துதி பாடிக் கொண்டு , தலைமைக்கு ஜால்ரா அடிக்கத்தான் லாயக்கு.. இன்னும் ரசிகர் மன்ற நிர்வாகியாக இருக்கிறார்" என ஒரு தவெக தொண்டர் விமர்சித்துள்ளார்.
தவெக தொண்டர்கள் கோபம்
"கட்சி அலுவலகத்தையே இந்த நிலைமைல வச்சிருந்தா இந்த எம்.எல்.ஏ ஈசிஆர் சரவணன் தன் தொகுதிய எப்படி வச்சிருப்பார்னு நினைக்கிறீங்க. தண்ணீர் இல்ல, எப்போ பாரு power cut, குப்பை அள்ளுவதில்லை ரோடு சரியாக இல்லை. எதை பத்தியும் இவருக்கு கவலையில்லை.. விஜய்காக இவருக்கு ஓட்டு போட்டு பெரிய தவறு செய்துவிட்டார்கள்" என தவெக தொண்டரே கொந்தளித்துள்ளார்.
போஸ்டர் மட்டுமல்ல, தீ விபத்து நடந்த இடத்துக்கு ஆய்வுக்குச் சென்றதை BGM உடன் ரீல்ஸ் போட்டது, துக்க நிகழ்வுக்குச் சென்றதை ரீல்ஸாக போட்டது என ஈசிஆர் சரவணனின் 'கிரைம் ரேட்' அதிகம். எம்.எல்.ஏ சரவணனை கட்சித் தலைமை கண்டித்து, அவரது அட்டகாசங்களை நிறுத்த வேண்டும் என்கிறார்கள் தவெகவினர்.


Click it and Unblock the Notifications
