Nanjil Sampath: போனால் போகட்டும் போடா.. நாஞ்சில் சம்பத் பதிவால் பரபரப்பு.. தவெக மீது அதிருப்தியா?
சென்னை: தவெக பரப்புரை செயலாளராக இருக்கக்கூடிய நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது. காற்றை யாரும் வழிமறிக்க முடியாது என்று நாஞ்சில் சம்பத் பதிவிட்டுள்ளார். தவெக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் இந்த பதிவை போட்டுள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தவெகவில் பரப்புரை செயலாளாரக இருப்பவர் நாஞ்சில் சம்பத். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தவெகவில் விஜய் முன்னிலையில் இணைந்தார். தவெக சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு பேசி வந்தார்.

போனால் போகட்டும் போடா..
தனது அதிரடியான பேச்சுகளால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வந்த நாஞ்சில் சம்பத் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தவெக சார்பாக தொடர்ந்து பங்கேற்று வந்த நாஞ்சில் சம்பத், இன்று தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது எக்ஸ் பக்கத்தில், "போனால் போகட்டும் போடா.. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா.. என்னுடைய பகலை யவரும் இருட்டாக்க முடியாது.. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது.. என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.
தவெக தலைமை மீது அதிருப்தியா?
தவெக தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டதால் இப்படி பதிவிட்டு இருக்கிறாரா? என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் கிளம்பியுள்ளது. மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு நாஞ்சில் சம்பத்திற்கு தவெக சார்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை. இடைத்தேர்தலுக்காக பணியாற்றக்கூடிய பொறுப்பாளர்கள் பட்டியலிலும் நாஞ்சில் சம்பத் பெயர் இடம் பெறவில்லை.
இதன் காரணமாக நாஞ்சில் சம்பத் தவெக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் போனால் போகட்டும் போடா என்று நாஞ்சில் சம்பத் பதிவிட்டுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூட பங்கேற்று பேசிய நாஞ்சில் சம்பத், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தர்.
தவெக அப்செட்?
அதேநேரத்தில், தவெக ஆட்சியில் சில குறைகள் இருப்பதாக அவர் பேசியது அங்கிருந்த தவெகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.. அதே நேரத்தில் குறைகளை சரி செய்வோம் என்று நாஞ்சில் சம்பத் தொடர்ந்து பேசினார். நாஞ்சில் சம்பத்தின் இத்தகைய பேச்சுகளால் அவர் மீது தவெக தலைமை அப்செட் ஆனதா? அல்லது தவெக தலைமை தன்னை கண்டு கொள்ளாததால் அவர் அதிருப்தியில் இந்த பதிவை போட்டாரா? என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
யார் இந்த நாஞ்சில் சம்பத்?
தனது வசீகர பேச்சாற்றலால் பார்வையாளர்களை தன் வசம் இழுப்பதில் கைதேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். கல்லூரி காலத்திலேயே திமுகவில் இணைந்த நாஞ்சில் சம்பத், வைகோ மீதான ஈர்ப்பால், மதிமுகவில் பயணித்தார். வைகோவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அதிமுகவில் ஐக்கியம் ஆகினார். அதிமுகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் பிரசார சுற்றுப்பயணம் செய்வதற்காக அவருக்கு இன்னோவா கார் ஒன்றையும் பரிசளித்தார். அந்த அளவுக்கு அதிமுகவில் முக்கியத்துவம் பெற்று இருந்த நாஞ்சில் சம்பத், பிறகு அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். அவருடனும் நாஞ்சில் சம்பத்திற்கு மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், அவரிடம் இருந்தும் விலகினார். பின்னர் திராவிடப் பேச்சாளர் என்னும் அடைமொழியோடு திமுக மேடைகளில் பேசினார். திமுக கட்சி கூட்டங்களில் தொடர்ந்து நாஞ்சில் சம்பத் பேசி வந்த போதிலும் அவரை திமுக தலைமை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து தவெகவில் கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் இணைந்தார்.


Click it and Unblock the Notifications
