இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்!
சென்னை: 2 நாட்களுக்கு முன் அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ நாராயணனுக்கு தவெகவில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த நாராயணன், அக்கட்சியில் இருந்து விலகினார். தற்போது 2 நாட்களிலே அவர் நாங்குநேரி தொகுதிக்காக தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவுள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி அமமுகவுக்கு நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், சைதாப்பேட்டை, மடத்துக்குள, பூந்தமல்லி, திருச்சி மேற்கு, பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால், அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவான ரெட்டியார்ட்டி நாராயணன் அதிருப்தி அடைந்தார். நாங்குநேரி தொகுதியில் மீண்டும் தனக்கு சீட் கிடைக்கும் என்று நாராயணன் எதிர்பார்த்திருந்தார். ஆனால் அமமுகவுக்கு சீட் ஒதுக்கப்பட்டதால், கடுமையான அப்செட்டில் இருந்தார்.
இதன் காரணமாக அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இதனால் நாராயணன் தவெகவில் இணைவாரா என்ற கேள்விகள் எழுந்தது. ஏனென்றால் 2 நாட்களுக்கு முன் தவெகவில் இணைந்தால் சீட் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற தவெக வேட்பாளர்கள் அறிமுக விழாவில் நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளராக நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் திருப்பத்தூர் தொகுதியை அமமுகவுக்கு ஒதுக்கியதால் அதிருப்தி அடைந்து அதிமுகவில் இருந்து விலகிய திருப்பதி என்பவரும் தவெகவில் இணைந்துள்ளார். அவருக்கும் திருப்பத்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் செய்யாறு தொகுதியில் வேட்பாளராகவும் அதிமுகவில் இருந்து விலகிய தூசி மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இப்படி அதிமுகவில் இருந்து விலகி வந்தவர்கள் ஏராளமானோருக்கு தவெகவில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படியான சம்பவங்களுக்கு செங்கோட்டையன் பின்னணியில் இருந்து செயல்பட்டதாக தெரிகிறது. அதேபோல் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியான பின், தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டதற்கு இதுவே காரணம் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications