எடப்பாடியை விஜய் சந்திக்கவில்லை! என்டிஏ கூட்டணியில் யாருடனும் பேசவில்லை! மறுக்கும் தவெக!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தவெக தலைவர் விஜய் சந்திக்கவில்லை என்றும் என்டிஏ கூட்டணியில் உள்ள எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் தவெக மறுப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தவெக தரப்பு கூறியிருப்பதாவது: தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு அதிமுகவுடன் பேச்சு நடத்தவில்லை.
விஜய், எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக வெளியான தகவல் தவறு.

என்டிஏ கூட்டணியில் இடம் பெற்ற எந்த கட்சியுடனும் பேசவில்லை. திமுக கூட்டணியில் தற்போது காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே பேசியுள்ளோம். இவ்வாறு தவெக தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் மக்கள் முழு ஆதரவை கொடுக்கவில்லை. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை எனும் பட்சத்தில் தவெக 108 இடங்களை பிடித்துள்ளது. அதிமுக கூட்டணி 53 இடங்களை பிடித்துள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களில் வென்றுள்ளது.
இந்த நிலையில் தவெக ஆட்சி அமைக்க 12 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பதால் விஜய் தரப்பு சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த போவதாக தெரிவித்தது. அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்தே தவெகவுக்கு அனுசரணையாக இருந்த காங்கிரஸ் கட்சியுடன் விஜய் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்பட்டது.
அது போல் தவெகவுக்கு யாரெல்லாம் ஆதரவு தருவார்கள் என செய்தியாளர்கள் கேட்ட போது 2 எம்எல்ஏக்களை கொண்ட ஐயுஎம்எல் மறுத்துவிட்டது. ஆனால் இரு கம்யூனிஸ்ட்கள் தலா 2 எம்எல்ஏக்கள், விசிக 2 எம்எல்ஏக்கள் ஆகிய கட்சிகள் தவெக அணுகினால் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
ஆனால் அதிமுகவின் லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ், செய்தியாளர்களை சந்தித்த போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தவெக தலைவர் விஜய் சந்தித்து பேசியுள்ளார். எனவே விரைவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என தெரிவித்திருந்தார்.
இது தவெகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விஜய் முதல்வராக வேண்டிதான் தமிழகத்தில் இத்தகைய புரட்சி நடந்துள்ளதாக கூறும் தவெகவினர், கூட்டணி என வரும்போதே விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்றே சொல்லிதான் கூட்டணி வைக்காமல் தவெக தனித்து போட்டியிட்டது. அப்படியிருக்கும் நிலையில் லீமா ரோஸ் சொன்னது தவறான கருத்து என சொல்கிறார்கள்.
அதிமுக எம்எல்ஏக்கள் 30 பேர் ஆதரவு அளிப்பதாக சொல்லப்படும் நிலையில் தவெக அதை மறுத்துள்ளது. அது போல் பாமகவிடம் தவெக பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் துணை முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் பதவி கேட்டதாக வந்த தகவலும் தற்போது தவெகவின் மறுப்பால் அடிபட்டு போகிறது.












Click it and Unblock the Notifications