விஜய் புகைப்படத்தைத் தவிர.. தவெக நிர்வாகிகளுக்கு தலைமை கொடுத்த வார்னிங்.. என்ன நடந்தது?
சென்னை: தவெக தலைவர் விஜய் புகைப்படம் மற்றும் அவரது வாசகங்களை மட்டுமே கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் பயன்படுத்த வேண்டும் என்று அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. தொண்டர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள தவெக தலைமை, உறுப்பினர் சேர்க்கையின் போது கட்சி சார்பாக அளிக்கப்பட்ட ஸ்டிக்கர் மட்டுமே ஒட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.
திமுக தரப்பில் "ஓரணியில் தமிழ்நாடு", அதிமுக தரப்பில் "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்", பாமக தரப்பில் "உரிமை மீட்பு பயணம்" என்று தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தவெக தரப்பில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. வீடு வீடாகச் சென்று தவெக தரப்பில் உறுப்பினர் சேர்க்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

அப்போது தவெகவில் இணையும் உறுப்பினர்களின் வீடுகளில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் என்ற விஜய் புகைப்படம் கொண்ட ஸ்டிக்கரையும் ஒட்டி வருகின்றனர். இதனிடையே சில பகுதிகளில் விஜயுடன் புஸ்ஸி ஆனந்த் புகைப்படம், விஜயுடன் மாவட்டச் செயலாளர் இருக்கும் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில் தவெக தலைமை சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், தேர்தல் பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கைப் பணிகளுக்காக வீடு வீடாகச் செல்லும் போது, தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அனுமதித்துள்ள பரப்புரை வாசகங்கள் மற்றும் புகைப்படத்தைக் கொண்ட ஸ்டிக்கர் மட்டுமே ஓட்ட வேண்டும். அவற்றையே சுவர் எழுத்துகள், பத்திரிகைகள், ஊடகங்கள். சமூக ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பரப்புரைகளுக்காகப் பயன்படுத்த வேண்டும்.
அதேபோல் தலைமைக் கழகத்தால் முறைப்படி அறிவிக்கப்படாத, அனுமதிக்கப்படாத வேறு வாசகங்களையோ புகைப்படத்தையோ, ஸ்டிக்கராகவோ, வேறு வடிவங்களிலோ, கழக நிகழ்ச்சிகளுக்காக, பரப்புரைக்காக அல்லது வேறு எந்தக் காரணத்திற்காகவும் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பரப்புரை, பொதுக் கூட்டங்கள், கொள்கை விளக்கப் பொதுக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது தனிப்பட்ட விதத்திலும் தலைமைக் கழகத்தால் பிரத்தியேகமாகத் தேர்தல் பரப்புரை சார்ந்து அங்கீகரிக்கப்படாத பேனர் டிசைன்கள், இலச்சினைகள், வாசகங்களையோ பயன்படுத்தக் கூடாது.
தலைமைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இலச்சினைகள், வாசகங்களோடு மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், கழகத் தலைவர் சார்ந்த வாசகங்கள் மற்றும் படங்களைத் தவிர்த்து வேறு வாசகங்களையோ, புகைப்படங்களையோ கழக நிகழ்ச்சிகள் சார்ந்தோ, தேர்தல் பரப்புரை சார்ந்தோ பயன்படுத்தக் கூடாது. மேலும் பரப்புரை தொடர்பான அனைத்திலும் இந்த நடைமுறையை உறுதியாகப் பின்பற்ற வேண்டும்.
அவ்வாறு பின்பற்றாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கழகத்தின் அனைத்து நிலை அமைப்புகளின் சார்பிலும் நடத்தப்படும் உள்ளரங்கு மற்றும் பொதுவெளி, பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளின் போது. கழக நிர்வாகிகளும் தோழர்களும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications